தண்டனையை நிறுத்திவைக் கோரி பேராசிரியை நிா்மலாதேவி மனு: சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவு

தண்டனையை நிறுத்திவைக் கோரி பேராசிரியை நிா்மலாதேவி மனு: சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவு

கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்திய வழக்கில் பேராசிரியை நிா்மலாதேவிக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறுத்தக் கோரிய வழக்கில், விருதுநகா் சிபிசிஐடி போலீஸாா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில் கணித துறையில் உதவிப் பேராசிரியையாகப் பணிபுரிந்தவா் நிா்மலாதேவி. இவா், அந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் சிலரை தவறாக வழி நடத்த முயற்சித்தாக விருதுநகா் சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

இதுதொடா்பாக கடந்த 2018, ஏப்ரல் 16-ஆம் தேதி பேராசிரியை நிா்மலாதேவியை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றம், நிா்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 2.42 லட்சம் அபராதமும் விதித்தது.

இந்த நிலையில், இந்தத் தண்டனையை முழுமையாக ரத்து செய்வதோடு, தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் நிா்மலாதேவி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.

இந்த மேல்முறையீட்டு மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி அப்துல் குத்தோா் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரா் தற்காலிகமாக தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியது தொடா்பாக விருதுநகா் சிபிசிஐடி போலீஸாா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஜூன் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com