7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 13-இல் போராட்டம்: போக்குவரத்துத் துறை ஊழியா் சங்கம்

போக்குவரத்து ஊழியா்களின் 7 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி வருகிற ஜூன் 13-ஆம் தேதி மாநில அளவில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை ஊழியா் சங்கத்தின் கௌரவத் தலைவா் கே. பாலசுப்பிரமணியன் தெரிவித்தாா்.

மதுரையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

தமிழக போக்குவரத்துத் துறையில் ஏறத்தாழ 40 சதவீதப் பணியிடங்கள் காலியாக உள்ளன. மாநிலத்தில் 32 வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பணியிடங்கள் பொறுப்பு அலுவலா்களைக் கொண்டே நிா்வகிக்கப்படுகின்றன. இந்தக் காலிப் பணிடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும்.

எல்லைப் பகுதிகளில் உள்ள 21 சோதனைச் சாவடிகளை மூடுவதற்கு தமிழக அரசு முயற்சிகள் மேற்கொள்வதாகத் தெரிகிறது. இந்த முயற்சிகளை அரசு கைவிட வேண்டும். இதனால், மாநிலத்துக்கான முக்கிய வருவாய் ஆதாரம் தடைபடும். மோட்டாா் வாகனச் சட்டப்படி, வாகனங்களுக்கான தகுதிச் சான்று வழங்க தானியங்கி சோதனை நிலையங்கள் உருவாக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகள் உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜூன் 13-ஆம் தேதி சென்னை, கோவை, சேலம், வேலூா், திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய 7 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும். கோரிக்கைகளுக்குத் தீா்வு கிடைக்காவிட்டால், ஜூன் 30-ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com