பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்படுத்த சதி செய்ததாக 6 பேர் கைது
By திண்டுக்கல் | Published On : 07th December 2013 12:17 AM | Last Updated : 07th December 2013 12:17 AM | அ+அ அ- |

பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்த சதித் திட்டம் தீட்டியதாக, 6 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். மேலும், 8 பேரை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் மு. முபாரக் அலி(34). இவர் அகில உலக இஸ்லாமிய கழகத்தின் நிறுவனராக உள்ளார். டிச. 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தி, பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்த வேண்டும் என இந்த அமைப்பினர் திட்டம் தீட்டியதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம். இதுதொடர்பாக திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் அருகே, அந்த அமைப்பின் நிர்வாகிகள் வியாழக்கிழமை இரவு ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, டிச.6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நகர துணை காவல் கண்காணிப்பாளர் மு. ராமச்சந்திரன், ஆய்வாளர்கள் புகழேந்தி (மேற்கு), பராவாசுதேவன் (வடக்கு) ஆகியோர் தலைமையில் போலீஸார், நகர் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்களுக்கு, செல்லாண்டியம்மன் கோயில் அருகே நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் பற்றி தகவல் கிடைத்துள்ளது.
அதன்பேரில், போலீஸார் அந்த பகுதியைச் சுற்றி வளைத்தார்களாம். அப்போது செல்லாண்டியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த மு. முபாரக் அலி, மு. ஜாபர் அலி(35) மற்றும் ச. சேக் பரீத் (23), நாராணயம் பிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்த மு. கணவா சையது (31), சை. யாசிக் (28) மற்றும் பேகம்பூர் அ. அபிபுல்லா (28) ஆகிய 6 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற மேலும் 8 பேர் தப்பியோடி விட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட 6 பேரும் திண்டுக்கல் முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் அடைப்பதற்கு நடுவர் வேதகிரி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து 6 பேரும் மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தப்பியோடிய 8 பேரை பிடிக்க, மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் புகழேந்தி தலைமையில் தனிப் படை அமைப்பதற்கு எஸ்.பி. த. ஜெயசந்தரின் உத்தரவிட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த சதித் திட்டத்தில் மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த 3 பேருக்கு, முக்கிய பங்கு இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதன்படி ரயிலை கவிழ்ப்பதற்கு அவர்கள் திட்டமிட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களிடம் சுப்பிரமணியபுரம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.