பட்டு உற்பத்தி செய்ய தமிழகம் சிறந்த இடம்: விஞ்ஞானி தகவல்

தமிழகத்தின் தட்பவெப்ப சூழ்நிலை மற்றும் மண்வளம் பட்டு உற்பத்திக்கு சிறந்ததாக உள்ளதாக, பட்டு வளர்ச்சி ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி சிக்கண்ணா தெரிவித்தார்.
Updated on
2 min read

தமிழகத்தின் தட்பவெப்ப சூழ்நிலை மற்றும் மண்வளம் பட்டு உற்பத்திக்கு சிறந்ததாக உள்ளதாக, பட்டு வளர்ச்சி ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி சிக்கண்ணா தெரிவித்தார்.

மத்திய பட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு அரசு பட்டு வளர்ச்சித் துறை சார்பில், வெண்பட்டு உற்பத்தி விழிப்புணர்வுக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் தலைமை வகித்தார். முன்னிலை வகித்த மண்டலப் பட்டு ஆராய்ச்சி நிலைய (சேலம்) விஞ்ஞானி சிக்கண்ணா பேசியதாவது:

பட்டு உற்பத்தியில் கர்நாடகம், மேற்குவங்கம், காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் முன்னோடியாகத் திகழ்கின்றன. ஆனாலும், தமிழகத்தில் உள்ள தட்பவெப்ப சூழ்நிலை, மண் வளம் ஆகியன பட்டு உற்பத்திக்கு சாதகமாக உள்ளன. தமிழக விவசாயிகள் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதிலும் ஆர்வம் காட்டுகின்றனர்.

கடந்த ஆண்டு 41 லட்சம் முட்டைகள் விநியோகம் செய்யப்பட்டன. அதில், சராசரியாக 73 கிலோ பட்டு நூல் உற்பத்தி கிடைத்தது. கர்நாடக உற்பத்தி அளவு 65 கிலோவாகவும், ஆந்திரம் 63 ஆகவும் உள்ளது.

வழக்கமாக சாகுபடி செய்யப்படும், அரிசி, கோதுமை மற்றும் பணப் பயிர்களை விட, பட்டு உற்பத்தி மூலம் விவசாயிகள் அதிக லாபம் பெறமுடியும் என்றார் அவர்.

மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம்: திண்டுக்கல் மாவட்டத்தில், பழனி, ஒட்டன்சத்திரம், சாணார்பட்டி ஆகிய பகுதிகளில் 3,100 ஏக்கரில் பட்டு உற்பத்தி நடைபெறுகிறது. மல்பெரி நடவு மானியம், சொட்டுநீர்ப் பாசனம், புழு வளர்ப்பு மனை போன்றவற்றுக்கு ரூ. 1.80 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

தமிழக பட்டுவளர்ச்சித் துறை மூலம், திண்டுக்கல் மாவட்டத்துக்கு நிகழாண்டில் ரூ. 1.7 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. பழனியில் பட்டு வளர்ப்பில் குழுமம் அமைப்பதற்காக ரூ. 16.8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

பட்டு வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் (திண்டுக்கல்) வே. சச்சிதானந்தம்: தமிழகத்தில் 34,793 ஏக்கரில், 21,415 விவசாயிகள் பட்டு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு 2,969 மெட்ரிக் டன் பட்டு கூடுகள் மூலம் 432 மெட்ரிக் டன் பட்டுநூல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இதில், 1,871 மெட்ரிக் டன் வெண்பட்டு கூடுகள் மூலம் 299 மெட்ரிக் டன் வெண்பட்டு நூல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

பட்டு வளர்ப்பில் சமுதாயக் குழுமங்கள் அமைத்து, உற்பத்தியைப் பெருக்குவதற்கு தமிழக அளவில் 3 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டம் பழனி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களில் சமுதாயக் குழுமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

அதில், பழனி மையத்துக்கு ரூ. 16.9 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வறட்சியின் காரணமாக, தற்போது பட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், சொட்டுநீர்ப் பாசனத்துக்கு முழு மானியம் வழங்கி, பட்டு உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

முன்னதாக, வெண்பட்டு புழு உற்பத்தி செய்யும் விவசாயிகள் 70 பேருக்கு ரூ. 23.42 லட்சம் மதிப்பிலான ஊக்கத் தொகை மற்றும் உபகரணங்கள், ஈடுபொருள்கள், மானியத் தொகை ஆகியன வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, வெண்பட்டு வளர்ப்பு முறை குறித்த தொழில்நுட்பக் கையேடும் வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில், பட்டு வளர்ச்சித் துறை மண்டல துணை இயக்குநர் எஸ். ராஜன், விஞ்ஞானிகள் பொ. சமுத்திரவேலு, ஏ.ஜி.கே. டேனியல், தா. சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com