பழனி கோயிலில் முடிக்காணிக்கை செலுத்தும் இடத்தில் முடி திருத்துவோர் கட்டாய வசூலில் ஈடுபடுவதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
பழனி தண்டாயுதபாணி கோயில் சார்பில் சரவணப்பொய்கை, தண்டபாணி நிலையம், தேவர்சிலை பகுதி, வடக்கு கிரிவீதி, வின்ச் நிலையம் என பல இடங்களிலும் பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்தும் இடம் உள்ளது. மொட்டையடிக்க கோயில் நிர்வாகம் ரூ.30 கட்டணமாக நிர்ணயித்துள்ளது. ஆனால் பக்தர்களிடம் முடிதிருத்துவோர் ரூ.100 வரை கேட்டு கட்டாய வசூலில் ஈடுபடுகின்றனர்.
இதுகுறித்து திருப்பூரைச் சேர்ந்த சுந்தர் கூறியது: குடும்பத்தோடு பழனிக்கு வந்தோம். இரண்டு குழந்தைகளுக்கு மொட்டையடித்தோம். ரூ. 60 டிக்கெட் மட்டுமன்றி மொட்டையடிக்கும் இடத்தில் இரு குழந்தைகளுக்கும் தலா ரூ.100 கட்டாய வசூலில் ஈடுபடுகின்றனர் என்றார்.
பழனி கோயிலிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் முடியை, ஆண்டுதோறும் ஏலம் விடுவதன் மூலம் கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கிறது. இதில் பெண்களின் முடிகளுக்கு கிராக்கி அதிகமாகும். ஒரு பெண்ணின் முடி பலஆயிரம் ரூபாய்க்கு விலைபோகிறது. இதை வைத்து பழனிக்கோயிலுக்கு முடிக்காணிக்கை செலுத்த வரும் பெண்களை கண்டறிந்து, அவர்களை மலைக்கு இலவசமாக அழைத்து செல்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று மொட்டை அடிக்கும் கும்பலும் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து முடிக்காணிக்கை செலுத்தும் இடத்தில் உள்ள அலுவலர்களுக்கு தெரிந்தும் கண்டு கொள்வதில்லை. பழனி தண்டாயுதபாணி கோயில் நிர்வாகம் முடி காணிக்கை விஷயத்தில் போதிய கண்காணிப்பு அதிகரிக்க வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.