"கஜா' புயல் பயிர் நிவாரணம் பெற 5 ஏக்கர் பரப்பு  நிர்ணயம்: மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படுமா?

கஜா புயல் காரணமாக மலை பயிர்களான மிளகு, காபி,  மலை வாழை உள்ளிட்டவை ஒவ்வொரு விவசாயிக்கும்
Updated on
2 min read

கஜா புயல் காரணமாக மலை பயிர்களான மிளகு, காபி,  மலை வாழை உள்ளிட்டவை ஒவ்வொரு விவசாயிக்கும் 20 ஏக்கருக்கு  மேல்  இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நிவாரணம் வழங்க அதிகபட்சம் 5 ஏக்கர் என நிர்ணயித்திருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 16ஆம் தேதி ஏற்பட்ட கஜா புயல், விவசாயப் பயிர்களுக்கும் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மாநில பேரிடர் நிவாரண நிதியாக, இறவைப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.13,500, மானாவாரி பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.7,410, மரப் பயிர்களுக்கு (பல்லாண்டு பயிர்) ஹெக்டேருக்கு ரூ.18 ஆயிரம் வீதம் பயிர் இழப்புகளுக்கு வழங்கும் வகையில் கணக்கீடு செய்ய தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதில் நெல் மற்றும் இறவைப் பயிர்களுக்கு மட்டும் குறைந்தபட்ச நிவாரணத் தொகையாக ரூ.1000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள முந்திரி, பலா, மா மரங்களை வெட்டி அகற்றுவதற்கு, மரம் ஒன்றுக்கு ரூ.500 வீதமும், பாதிப்புக்குள்ளான தென்னை மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு ரூ.1,100 வீதமும் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறு, குறு மற்றும் பெரு விவசாயிகள் என அனைத்து விவசாயிகளுக்கும் அதிகபட்சமாக 2 ஹெக்டேர் பாதிப்புகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கீட்டின் அடிப்படையிலேயே, கொடைக்கானல் மலைப் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்பதை அறிந்த விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
கொடைக்கானல் மலையை பொருத்தவரை, கஜா புயலால் காபி, மிளகு, மலை வாழை, கேரட், உருளை, பூண்டு, அவகோடா, ஏலக்காய் உள்ளிட்ட பெரும்பாலான மலைப் பயிர்கள் கடுமையாக  சேதமடைந்துள்ளன.  
அதேநேரத்தில், ஒவ்வொரு விவசாயிக்கும் பல ஏக்கர் பரப்பிலான பயிர்கள் சேதமடைந்துள்ளன. கீழ்மலையை பொருத்தவரை, ஒவ்வொரு விவசாயிக்கும் 20 ஏக்கருக்கு கூடுதலாகவே தோட்டங்கள் உள்ளன. இதில் 5 ஏக்கருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கினால், மலை விவசாயம் மீண்டும் எழுச்சி பெற முடியாத நிலை ஏற்படும் என்கின்றனர் விவசாயிகள்.
இதுதொடர்பாக புல்லாவெளி காபி விவசாயி ரமேஷ் கூறியதாவது: காபி செடிகளை பொருத்தவரை, ஏக்கருக்கு 20 முதல் 30 சதவீத செடிகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. இந்த செடிகளை வெட்டி எடுத்துவிட்டு மீண்டும் நடவு செய்தால், 4 ஆண்டுகளுக்கு பின்னரே மகசூல் பெற முடியும். இதுபோன்ற சூழலில், 5 ஏக்கர் என அளவீடு நிர்ணயித்து நிவாரணம் வழங்கினால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் மீள முடியாத நிலை ஏற்படும். கீழ்மலையை பொருத்தவரை, பல ஏக்கர் பரப்பு விவசாயம் செய்யப்படாமல் புதர் காடாக மாறிவிட்டது. கஜா புயல், புதர் காடுகளின் பரப்பை மேலும் அதிகரிக்க கூடிய சூழலை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
தாண்டிக்குடியைச் சேர்ந்த விவசாயி சிவக்குமார் கூறியதாவது: மிளகு மற்றும் மலை வாழை பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. கீழ்மலையில் மட்டும் 2 லட்சம் மரங்களில் படர்ந்திருந்த மிளகு கொடிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மிளகு செடிகளை பொருத்தவரை நடவு செய்த 7 ஆண்டுகளுக்கு பின்னரே மகசூல் பெற முடியும். புயல் காரணமாக, கீழ்மலை சாகுபடி செய்யப்பட்டிருந்த மிளகு கொடிகள் மற்றும் மலை வாழை பயிர்களில் 60 சதவீதத்திற்கும் மேலாக சேதமடைந்துள்ளன. பெரு விவசாயிகளாக இருந்தாலும் கூட, இந்த இழப்பிலிருந்து மீள்வது எளிதானது அல்ல என்றார்.
பன்றிமலை பகுதியைச் சேர்ந்த விவசாயி ஸ்ரீநிவாசன் கூறுகையில்: அரசு சார்பில் ஒரு திட்டத்தை செயல்படுத்தும்போது மட்டுமே, குறைந்தபட்ச பரப்பினை நிர்ணயித்து சோதனை முயற்சி மேற்கொள்ள வேண்டும். இயற்கை பேரிடரின் போது, கடுமையான சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், நிவாரணத் தொகை வழங்குவதற்கு அதிகபட்சம் 5 ஏக்கர் என நிர்ணயித்திருப்பது விவசாயிகளுக்கு எந்த வகையிலும் உதவியாக இருக்காது. எனவே, அதிகபட்சம் 5 ஏக்கருக்கு மட்டுமே நிவாரணத் தொகை என்ற முடிவினை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com