பழனி அருகே ஆய்வேளிர் மன்னர்களின் சங்க கால கோட்டை கண்டுபிடிப்பு

பழனி அருகே ஆயக்குடியில் ஆய்வேளிர் மன்னர்களின் அழிந்து போன சங்க கால கோட்டை கண்டறியப்பட்டுள்ளது.

பழனி அருகே ஆயக்குடியில் ஆய்வேளிர் மன்னர்களின் அழிந்து போன சங்க கால கோட்டை கண்டறியப்பட்டுள்ளது.
 பழனியை அடுத்த ஆயக்குடியின் தென்மேற்குப் பகுதியில் வயல்வெளி அருகே மேடான பகுதி உள்ளது.  இந்த மண்மேட்டில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, பேராசிரியர் அசோகன், முனைவர் கன்னிமுத்து, ஆய்வு மாணவர்கள் திருவேங்கடம், வாஞ்சிநாதன், சேரல்பொழிலன் உள்ளிட்டோர் மேற்கொண்ட ஆய்வில் கி.பி. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆய்வேளிர் மன்னர்களின் சங்க கால கோட்டை  இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளது. 
  அழிந்து போன இக்கோட்டை மண், பாறாங்கற்கள், செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. தற்போது சுமார் பத்து ஏக்கர் பரப்பளவிலான இந்த பகுதி மண்மேவி மூடியுள்ளது. கோட்டைக்குள் சங்க காலத்தில் ஏராளமான மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. மண்ணால் செய்யப்பட்ட உணவுப்பாத்திரங்கள், பானை ஓடுகள், நகக்குறி ஓடுகள், சங்கிலி ஓடுகள், கருப்புசிவப்பு மண்பானை ஓடுகள் ஆகியவை உடைந்து காணப்படுகின்றன. 
செங்கற்களில் காணப்படும் குறியீடுகள் அழுத்தமாக உள்ளது. சிறுவர், சிறுமியர் விளையாடும் காடான் விளையாட்டுக்கான(தற்போதைய பாண்டி ஆட்டம்) வட்ட வடிவ ஓடுகள் பல கிடைத்துள்ளன. 
கூரை வேய பயன்படுத்தப்படும் ஓடுகள், களிமண்ணாலான ஓடுகள், உடைந்த அகல் விளக்குகளும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது:  
இங்கு மூலிகை, உணவு,  அரைக்கப் பயன்படுத்தப்படும் தேய்ப்புக்கல் கிடைத்துள்ளது.  ஒரு கல்லில் கூ என்ற பழங்கால தமிழ் எழுத்து உள்ளது.  தமிழ்மொழி பிராமி எழுத்தில் இருந்து வட்டெழுத்தாக மாறிய காலத்தில் இது எழுதப்பட்டிருக்கிறது. 
 அதாவது மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்டுள்ளது.  இதே பகுதியில் பழங்கால கொற்றவை சிலையும் கிடைத்துள்ளது.  ஆயக்குடியில் ஆய்வேளிர் மன்னர்கள் ஆட்சி செய்தது முன்னரே உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதன்காரணமாகவே இந்த ஊர் ஆய்குடி என்று இருந்து ஆயக்குடி என திரிந்துள்ளது. பழனி சங்க காலத்தில் ஆவி வேளிர் மன்னர்களின் ஆட்சியில் இருந்ததால் ஆவினன்குடி என அழைக்கப்பட்டுள்ளது.
 இந்த இரு மன்னர்களுக்கு இடையே நடைபெற்ற போரில் இந்த கோட்டை அழிந்திருக்கலாம் அல்லது கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் களப்பிரர்கள் படையெடுப்பால் அழிந்திருக்கலாம். 
இதுகுறித்து மேலும் ஆய்வு செய்தால் ஏராளமான தகவல்கள் கிடைக்கும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com