தொகுதி நிலவரம்: மல்லிகைப் பூ பட்டணத்தில் மாலை சூடப் போவது யார்?

குக்கிராமங்கள் நிறைந்த மல்லிகை மணம் வீசும் நிலக்கோட்டை (தனி) தொகுதியில் இருமுனைப் போட்டியே நிலவுகிறது.
Updated on
2 min read

குக்கிராமங்கள் நிறைந்த மல்லிகை மணம் வீசும் நிலக்கோட்டை (தனி) தொகுதியில் இருமுனைப் போட்டியே நிலவுகிறது.
 இத்தொகுதியில் சாகுபடி செய்யப்படும் மல்லிகை பூ, மதுரை மல்லி என்ற சிறப்பை மதுரை மாநகருக்கு பெற்றுக் கொடுத்துள்ளது. சுதந்திரப் போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா வாழ்ந்த வத்தலகுண்டு, நீதிக்கட்சி தலைவர்களுள் ஒருவரான செளந்திரபாண்டியனார் பிறந்த பட்டிவீரன்பட்டி போன்ற சிறப்புகள் மட்டும் இத்தொகுதியின் பழம் பெருமைகளாக உள்ளன.
கடந்த 1952 மற்றும் 1957 -இல் நடைபெற்ற 2 தேர்தல்களில் மட்டும் நிலக்கோட்டை தொகுதியில் இரட்டை உறுப்பினர் முறை அமலில் இருந்தது. அதன் பின்னர் தனித் தொகுதியாக இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.மேலும் இத்தொகுதியிலிருந்து வெற்றி பெற்ற வேட்பாளர்களில்,  மறைந்த முன்னாள்  எம்எல்ஏ. ஏ.எஸ்.பொன்னம்மாள் நீங்கலாக வேறு எந்த ஒரு எம்எல்ஏவும் குறிப்பிடும்படியான வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்தவில்லை என்பதும் நிலக்கோட்டை பகுதி மக்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.
 இதுபோன்ற சூழலில், கடந்த 2 ஆண்டுகளாக சட்டப்பேரவை உறுப்பினர் இல்லாதது இத்தொகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2016-இல்  நடைபெற்ற சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக சார்பில்  இத் தொகுதியில் போட்டியிட்ட ஆர்.தங்கதுரை, டிடிவி.தினகரன் ஆதரவாளராக மாறியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதன் காரணமாக இடைத் தேர்தலை சந்தித்துள்ள நிலக்கோட்டை தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ தேன்மொழி, திமுக சார்பில் சௌந்தரபாண்டியன், அமமுக சார்பில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட ஆர்.தங்கதுரை, நாம் தமிழர் கட்சி சார்பில் சங்கிலிபாண்டி, மக்கள் நீதி மய்யம் சார்பில் சின்னதுரை ஆகிய பிரதான வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 21 பேர் போட்டியிடுகின்றனர். 
 தீர்க்கப்படாத பிரச்னைகள்: இத்தொகுதியின் பல கிராமங்கள் வைகை ஆற்றின் கரைகளில், இருந்து வந்தாலும், குடிநீருக்காக போராடும் நிலை இன்று வரை தொடர்கிறது. அதேபோல், மணல் திருட்டு காரணமாகவும் இப்பகுதிகளில் நிலத்தடி நீராதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காண வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை இதுவரை கானல் நீராகவே உள்ளது. 
 நிலக்கோட்டை பகுதியில் விளையும் பூக்களுக்கு நல்ல சந்தை வாய்ப்பை பெற இங்கு அரசு வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க வேண்டும். மஞ்சளாறு கால்வாயிலிருந்து, ஆலங்குளம், சிறுகுளம், பிள்ளையார்நத்தம், எத்திலோடு, மட்டப்பாறை கண்மாய்களுக்கு தனிக் கால்வாய் அமைக்க வேண்டும். வத்தலகுண்டுவில் வாழை ஆராய்ச்சி மையம், முருங்கை பவுடர் தொழிற்சாலை அமைக்க வேண்டும்.  ஆகியன இத்தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. அதேபோல் நிலக்கோட்டையிலிருந்து சிங்கப்பூர், மலேசியா மற்றும் அரபு நாடுகளுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும் என்பதும் கோரிக்கையாக இருந்து வருகிறது. 
 ஒவ்வொரு தேர்தலின் போதும் அரசியல் கட்சிகள் சார்பில் இதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட்டாலும், எந்த திட்டமும் நிறைவேற்றப்படாதது தொகுதி மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கள நிலவரம்: நிலக்கோட்டை தொகுதியை பொருத்தவரை, இதுவரை நடைபெற்ற 15 தேர்தல்களில், அதிகபட்சமாக அதிமுக மற்றும் காங்கிரஸ் தலா 5 வெற்றிகளை பதிவு செய்துள்ளன. திமுகவுக்கு 2, தமாகா, புதிய தமிழகம் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு தலா 1 வெற்றியையும் இத்தொகுதி மக்கள் அளித்துள்ளனர். இந்த முறை 2 ஆண்டுகளுக்காக மட்டுமே ஒரு புதிய உறுப்பினரை தேர்வு செய்வதற்கான இடைத் தேர்தல் நடைபெறுகிறது. ஆனாலும், அதிமுகவுக்கு இது முக்கிய தேர்தல் என்பதோடு முன்னாள் எம்எல்ஏ களத்தில் நிற்பதால் வெற்றிப் பெற வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர் தேன்மொழிக்கு குக்கிராமங்கள் வரை நல்ல பெயர் இருந்தாலும், அவரது கணவரை கடந்து தொடர்பு கொள்ள முடியாத நிலை இருப்பது பலவீனமாக கருதப்படுகிறது. 
 திமுக வேட்பாளரை பொருத்தவரை, அவரது நண்பர் ஒருவரின் வழிகாட்டுதலின்படியே அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். அதன் காரணமாக, திமுக மட்டுமின்றி கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இதனால், திமுக துணைப் பொதுச் செயலர் ஐ.பெரியசாமியின் பிரசாரம் எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்பது தெரியவில்லை. அமமுக வேட்பாளர் தங்கதுரையை பொருத்தவரை, வெற்றி பெற்ற பின் தொகுதிக்குள் வரவே இல்லை என்பதே பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. பதவி பறிக்கப்பட்ட பின்னர் கூட, மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற நோக்கில் மக்களை சந்தித்து அனுதாபம் தேடுவதற்கான முயற்சியிலும் இவர் ஈடுபடவில்லை. 
இன்றைய நிலையில், நிலக்கோட்டை தொகுதியில் அதிமுக, திமுகவுக்கு இடையிலே மட்டுமே இருமுணைப் போட்டி நிலவுகிறது. இதனை மும்முனை போட்டியாக மாற்றும் முயற்சியில் அமமுக வேட்பாளர் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இருப்பினும் வெற்றிக் கனியை பறிப்பதற்கு அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

வாக்காளர்கள் விவரம்: 
 ஆண்கள்    1,11,508 
பெண்கள்     1,14,204
 இதரர்      4 
மொத்தம்     2,25,716

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com