ரூ.6 ஆயிரம் உதவித்தொகை பெறும் திட்டம் 28% விவசாயிகள் மட்டும் விண்ணப்பித்திருப்பதால்   இலக்கை எட்ட அரசு அலுவலர்களுக்கு நெருக்கடி

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் சிறு குறு விவசாயிகள் 28 சதவீதம் பேர் மட்டுமே
Updated on
2 min read

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் சிறு குறு விவசாயிகள் 28 சதவீதம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ள நிலையில், பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு அலுவலர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 
சிறு, குறு விவசாயிகளின் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம்(3 தவணைகளில்) நிதி உதவி வழங்கும்(பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டம்) திட்டம்  நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 2019 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்காக, மத்திய அரசு இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக எதிர்கட்சிகள் சார்பில்  குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனிடையே, எதிர்பார்த்த அளவுக்கு பயனாளிகள் அனைவருக்கும் இத்திட்டத்தின் மூலம் பலன் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. 
தமிழகத்தை பொருத்தவரை, கடந்த 2015-16 ஆம் ஆண்டு புள்ளியியல் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட விவசாயிகள் கணக்கெடுப்பு அடிப்படையில், சிறு குறு  விவசாயிகள் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் 2.65 லட்சம் சிறு குறு விவசாய பண்ணைக் குடும்பங்கள் மற்றும் 38 ஆயிரம் பெரு விவசாய பண்ணைக் குடும்பங்களும் உள்ளன. 
அதனடிப்படையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 2.65 லட்சம் குடும்பங்கள், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்றன. ஆனால், தற்போது வரை 76 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் மட்டுமே ரூ.6 ஆயிரம் நிதி உதவித் தொகை பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளனர். இதனை அடுத்து, 1.89 லட்சம் விவசாயிகள், பயனாளிகள் பட்டியலில் இடம் பெறாமல் போனதற்கான காரணங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 
அதில், பெரும்பாலான விவசாயிகளின் நிலம் கூட்டுப் பட்டாவில் இருப்பது தெரிய வந்துள்ளது. விவசாய கணக்கெடுப்பின் போது தனித் தனியாக விவரங்களை பதிவு செய்த விவசாயிகளுக்கு, தற்போது தனிப் பட்டாவுக்கான ஆவணங்கள் சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தேர்தல் நேரத்தில் செயல்படுத்தப்படும் இத்திட்டம், எதிர்பார்த்த அளவுக்கு பலன் அளிக்குமா என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது.
இதுதொடர்பாக வருவாய்த்துறை அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது: திண்டுக்கல் மாவட்டத்தில் 2.65 சிறு குறு பண்ணைக் குடும்பங்கள் என்ற புள்ளியல் துறையின் கணக்கெடுப்பு துல்லியமானதாக இருக்க முடியாது.  மேலும், அரசு ஊழியர்கள், ரூ.10ஆயிரத்திற்கும் கூடுதலாக ஓய்வூதியம் பெறுவோர் உள்ளிட்டோர் 5 ஏக்கருக்கு குறைவான நிலம் வைத்திருந்தாலும், இத்திட்டத்தில் பயன்பெற முடியாது. தகுதியான  பயனாளிகளாக இருந்தாலும், தனிப் பட்டா வழங்குவதற்கு நிலம் அளவீடு, பாகப் பிரிவினை சர்வே எண்ணை உள்பிரிவாக மாற்றுதல், வரை படம் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளை உடனடியாக செய்ய முடியாது. அதனால், சிறப்பு முகாம் நடத்தினாலும் இத்திட்டத்தில் பயன் பெறுவோரின் எண்ணிக்கை 1 லட்சத்தை எட்ட வாய்ப்பில்லை. ஆனால், தேர்தல் நெருங்குவதால் பயானாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றார்.


பயன்பெற முடியாத குத்தகை விவசாயிகள்
 சில பகுதிகளில் நிலத்தின் உரிமையாளர்கள் வெளிமாநிலங்களில் வசித்து வரும் நிலையில், அந்த நிலங்களை குத்தைக்கு எடுத்து சிலர் விவசாயம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக, நிலத்தின் உரிமையாளர்கள் மட்டுமின்றி குத்தைக்கு எடுத்து வேளாண்மை செய்யும் விவசாயிகளும், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் பலனை பெற முடியாத நிலை உள்ளதாகவும் வேளாண்மை அலுவலர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com