விடைத்தாள் திருத்தும் பணியில் விதிமுறை மீறல்: தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகப் புகார்
By DIN | Published On : 01st April 2019 02:33 AM | Last Updated : 01st April 2019 02:33 AM | அ+அ அ- |

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல், தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக கல்வித்துறை அதிகாரிகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டத் தலைவர் ஜெகதீஷ்குமார், செயலர் சல்மா பிரியதர்ஷன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை கூட்டாகத் தெரிவித்தது:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு பணிகளை எந்தெந்த அடிப்படையில் ஒதுக்கீடு செய்யவேண்டும் என்பதற்கு, தேர்வுத் துறை பல வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகளை வழங்கியுள்ளது. ஆனால், திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் தேர்வுத் துறையின் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை.
தனியார் பள்ளிகளுக்கு சாதகமான வகையில், தேர்வு அறை முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் பறக்கும் படை அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வத்தலகுண்டு கல்வி மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளிகளுக்குச் சாதகமாக பெரும் முறைகேடுகள் நடந்துள்ளன. பறக்கும் படையினர் இல்லாமலேயே தேர்வு நடைபெற்றுள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்பு கொண்டு புகார் அளித்தபோது, அனைத்துப் பணிகளும் இணை இயக்குநர் மேற்பார்வையில் நடைபெறுவதாகக் கூறி சமாளித்து விட்டனர்.
திங்கள்கிழமை முதல், புனித லூர்து அன்னை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு விடைத் தாள் திருத்தும் பணி நடைபெறுகிறது. இப்பணியை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கான பணி ஒதுக்கீட்டிலும் விதிமுறை மீறல் உள்ளது. இதனைச் சுட்டிக்காட்டிய போதிலும், இணை இயக்குநர் அறிவுறுத்தலின்படி செய்வதாக முகாம் அலுவலரான வத்தலகுண்டு கல்வி மாவட்ட அலுவலர் தெரிவித்துவிட்டார்.
தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்குச் சாதகமாகச் செயல்பட்டுள்ள கல்வித் துறை அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தேர்வு முடிவுகள் வெளியாகும்போது, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அதே நேரத்தில், அரசுப் பள்ளிகளுக்கு கடுமையான நெருக்கடி அளிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியான பின், தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையிலும் உயர்மட்ட விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தனர்.