பழனியில் அரசு அதிகாரி போல் நடித்து கடன் பெற்றுத் தருவதாக ரூபாய் பல லட்சம் மோசடி செய்தவர் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் சனிக்கிழமை போலீஸில் புகார் தெரிவித்தனர்.
பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளி ஒருவர், பழனி அருகேயுள்ள அமரபூண்டி கரட்டுப்பிரிவைச் சேர்ந்தவர் என சுற்றுவட்டாரப்பகுதிகளில் அறிமுகம் ஆகியுள்ளார். மேலும் தனது பெயர் ஜான்மூர்த்தி என்றும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரி என்றும் பொய்யான தகவலையும் தெரிவித்துள்ளார். மேலும் கரட்டுப்பிரிவைச் சேர்ந்த சாந்தி என்ற பெண்ணின் உதவியுடன் அப்பகுதி மக்களிடம் ரூ.5 லட்சம் கடனுதவி பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இந்தத் தொகையில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படுவதால் ரூ.1.5 லட்சம் மட்டும் செலுத்தினால் முழுக் கடன் தொகை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இதனை நம்பி பழனி, வி.கே.மில்ஸ், கலையமுத்தூர், கலிக்கநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் அவரிடம் பணம் கொடுத்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை கடன் வழங்குவதாக அனைவரையும் அமரபூண்டி கரட்டுப்பிரிவுக்கு வரச் சொல்லியுள்ளார். அவர் அங்கு வராததால், பணம் கொடுத்தவர்கள் அவரது செல்லிடப்பேசியை தொடர்பு கொண்டனர்.
ஆனால் செல்லிடப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சனிக்கிழமை பழனி நகர் காவல் நிலையத்திற்கு திரண்டு வந்து புகார் செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.