காவல்துறையைச் சேர்ந்த 2,076 பேர் தபால் வாக்குப் பதிவு
By DIN | Published On : 11th April 2019 07:06 AM | Last Updated : 11th April 2019 07:06 AM | அ+அ அ- |

தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள திண்டுக்கல் மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த 2,076 பேருக்கான தபால் வாக்குப் பதிவு புதன்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் காவல்துறையைச் சேர்ந்த 2,076 பேர் ஈடுபடவுள்ளனர். அவர்களுக்கு தபால் மூலம் வாக்கு செலுத்துவதற்கு புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திண்டுக்கல், நத்தம், நிலக்கோட்டை, ஆத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த 1,501 காவல்துறையினருக்கு திண்டுக்கல் ஆயுத படை மைதானத்திலும், பழனி, ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியைச் சேர்ந்த 396 பேர் பழனி பட்டாலியன் மைதானத்திலும், கரூர் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட வேடசந்தூர் சட்டப்பேரவைத் தொகுதியைச் சேர்ந்த 179 பேர் வேடசந்தூர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலகத்திலும் வாக்கு செலுத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் தபால் ஓட்டுப் போடும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் டி.ஜி.வினய் பார்வையிட்டார். அப்போது அவர் கூறியது: காவல்துறையைச் சேர்ந்த அலுவலர்கள் தபால் வாக்குகளை முழுமையாக செலுத்தும் வகையில் விரிவான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் விடுப்பட்டவர்கள், அஞ்சல் மூலமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 23ஆம் தேதி காலை 8 மணிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். பிறருக்கு முன்மாதிரியாக 100 சதவீத வாக்களிப்பினை காவல்துறையினர் உறுதி செய்ய வேண்டும் என்றார்.
மாலை 6 மணி வரையிலும், 1600-க்கும் மேற்பட்டோர் தபால் வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.
பழனி: பழனியில் தேர்தல் பணிக்கு செல்லும் காவல்துறையினருக்கு தபால் வாக்குப் பதிவு புதன்கிழமை நடைபெற்றது. பழனி புதுதாராபுரம் சாலையில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படை ஏழாம் அணி வளாகத்தில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. இப்பணிகளை தேர்தல் பார்வையாளர் சுதேஷ் முக்தா, சார் ஆட்சியர் அருண்ராஜ் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது வட்டாட்சியர் பழனிச்சாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சின்னம் பொருத்தும் பணி: பழனி ஒன்றிய அலுவலகத்தில் பழனி சட்டப்பேரவை தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சின்னங்கள் பொருத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறை அரசியல் கட்சியினர் முன்னிலையில் திறக்கப்பட்டு சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது. இதில் சுமார் நூறு அரசுப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைத்து இயந்திரங்களிலும் வியாழக்கிழமை மாலைக்குள் சின்னங்கள் பொருத்தப்பட்டு விடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.