திண்டுக்கல் மாவட்டத்தில் இறுதி கட்ட பிரசாரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக, அதிமுக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக, அதிமுக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் கட்சியினர் செவ்வாய்க்கிழமை இறுதி கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். 
திண்டுக்கல்லில் பாமக வேட்பாளர்: அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் ஜோதிமுத்து, திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார். அங்கு பேரணியாக வந்த தொண்டர்கள்  முன்னிலையில், வனத் துறை அமைச்சர் சி. சீனிவாசன் பேசியதாவது: அதிமுகவின் வெற்றி, மக்களவைத் தேர்தலிலும் தொடரும் வகையில், மக்கள் ஆதரவு அளிக்கவேண்டும் என்றார். 
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன், கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் எஸ்ஆர்கே. பாலு (தேமுதிக), கோபால் (பாமக) உள்பட பலர் கலந்துகொண்டனர்.
வத்தலகுண்டில் திமுக வேட்பாளர்: திமுக வேட்பாளர் வேலுச்சாமி, வத்தலகுண்டு பகுதியில் பேரணியாகச் சென்று தனது பிரசாரத்தை நிறைவு செய்தார். வத்தலகுண்டு காளியம்மன் கோயில் பகுதியிலிருந்து தொடங்கிய இப்பேரணி, பேருந்து நிலையத்தில் நிறைவுப் பெற்றது. இதில், நிலக்கோட்டை சட்டப்பேரவை இடைத் தேர்தல் வேட்பாளர் சௌந்தரபாண்டியனும் கலந்துகொண்டார். 
பின்னர், வேலுச்சாமி பேசியதாவது: திண்டுக்கல் தொகுதியின் விவசாயப் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க மக்களவையில் குரல் எழுப்புவேன். திண்டுக்கல்லில் அலுவலகம் அமைத்து, மக்கள் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
பழனி: பழனி பேருந்து நிலையப் பகுதியில், அதிமுக சார்பில் நகரச் செயலர் முருகானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வேணுகோபாலு, செல்லசாமி உள்ளிட்டோர் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதில், அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர். பிரசாரம் முடிந்த பின்னர், நகருக்குள் இரு சக்கர வாகனத்தில் சுற்றி வந்தனர்.
பழனியை அடுத்துள்ள பாலசமுத்திரத்தில் பேரூர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், அக்கட்சியினர் ஏராளமானோர் இரு சக்கர வாகனத்தில் திரண்டு, கடை வீதி, பேரூராட்சி அலுவலகம், குரும்பபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பிரசாரம் செய்தனர். இதில், பாலசமுத்திரம் பேரூர் செயலர் வழக்குரைஞர் தினேஷ், கூட்டுறவு சங்க நிர்வாகி முருகானந்தம் உள்பட பலர் பங்கேற்றனர்.
பழனி நகரில் சண்முகபுரம், லட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில் அமமுக நகரச் செயலர் கணேசன், கிளைச் செயலர் இன்பா உள்ளிட்டோர் கடைகள், வீடுகளுக்குச் சென்று துண்டுப்பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தனர்.
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ப. வேலுச்சாமிக்கு ஆதரவாக, ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவை உறுப்பினர் அர.சக்கரபாணி, ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் உள்ள ஒவ்வொரு கடை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து, ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் உள்ள அண்ணா திடலில் இறுதி கட்ட தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் அர.சக்கரபாணி பேசினார். இந்தக் கூட்டத்துக்கு, ஒட்டன்சத்திரம் வடக்கு ஒன்றிய திமுக செயலர் இரா. ஜோதீசுவரன் தலைமை வகித்தார்.
கொடைக்கானல்: திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட கொடைக்கானலில் நகர் பகுதி, மேல்மலை ஒன்றியப் பகுதி மற்றும் கீழ்மலைப் பகுதிகளிலும் அதிமுக, திமுக, பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சியினரும் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். 
கொடைக்கானலில் அண்ணா சாலை, மூஞ்சிக்கல், பேருந்து நிலையப் பகுதிகளில்  அதிமுக கூட்டணிக் கட்சியினரும், அமமுக கட்சியினரும் ஒரே நேரத்தில் பிரசாரம் செய்ததால், அப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், மாலை 6 மணி வரை எவ்வித பிரச்னையுமின்றி தேர்தல் பிரசாரங்கள் நடைபெற்றன. பல்வேறு பகுதிகளில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com