இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு திண்டுக்கல்லில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
By DIN | Published On : 26th April 2019 02:48 AM | Last Updated : 26th April 2019 02:48 AM | அ+அ அ- |

இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், திண்டுக்கல்லைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் சார்பில் வியாழக்கிழமை சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது, தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 45 குழந்தைகள் உள்பட 359 பேர் உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. திண்டுக்கல் மேட்டுப்பட்டியிலுள்ள புனித வியாகுல
அன்னை ஆலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இதில் நிர்வாக தந்தை செல்வராஜ், பங்குத்தந்தை பன்னீர்செல்வம் உள்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.