நதிகளை பாதுகாப்பதால் இயற்கையை காப்பாற்ற முடியும்
By DIN | Published On : 04th August 2019 03:53 AM | Last Updated : 04th August 2019 03:53 AM | அ+அ அ- |

மக்கள் தாங்கள் வாழும் பகுதிகளில் உள்ள நதிகளைக் காப்பதன் மூலமாக மட்டுமே இயற்கையை காப்பாற்ற முடியும் என மேகாலய முன்னாள் ஆளுநர் சண்முகநாதன் பேசினார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகநதியை பல்வேறு தன்னார்வ அமைப்பினர் சேர்ந்து தூய்மைப்படுத்தி கடந்த சில மாதங்களாக தீபாராதனை நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர்.
சனிக்கிழமை ஆடிப்பெருக்கை முன்னிட்டு அறுமுகப்பெருவிழா என்ற பெயரில் பிரமாண்டமான அளவில் சண்முகநதி மஹா தீபாராதனை நடைபெற்றது.
மெய்த்தவம் அடிகள் தலைமையில் கந்தவிலாஸ் பாஸ்கரன், பண்ணாடி ராஜா, ஆடிட்டர் அனந்த சுப்ரமணியம், அக்க்ஷயா நாதன், அரிமா சுப்புராஜ் உள்ளிட்டோர் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மேகாலயா முன்னாள் ஆளுநர் சண்முகநாதன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியது:
சண்முகநதியை தூய்மையாக வைத்துக் கொள்வோம் என அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும். நதிகளை காப்பதன் மூலமாக இயற்கையை காப்பாற்ற முடியும். நதிகளை தம் வீடுகள் போல எண்ண வேண்டும், பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பழனிக் கோயில் இணை ஆணையர் செல்வராஜ், தலைமைச் செயலக நிதித்துறை இணை ஆணையர் அருண்ராஜ் ஆகியோர் பேசினர்.
விழாவில் பழனி சாது சண்முக அடிகளார், போகர் புலிப்பாணி பாத்திர சுவாமிகள், செண்டலங்கார செண்பகமன்னார் ஜீயர் சுவாமிகள், முதலமடை சுனில் சுவாமிகள், கருடானந்த சுவாமிகள், ஈஸ்வரப்பட்டா குட்டி சுவாமிகள் என ஏராளமான மடாதிபதிகளும், ஜீயர்களும், சாதுக்களும் பங்கேற்றனர்.
சண்முகநதிக்கு சோடஷ அபிஷேகம், பிரமாண்டமான விளக்குகளை கொண்டு பெருஞ்சுடர் வழிபாடு ஆகியன நடத்தப்பட்டு சண்முகநதி ஆற்றுக்கு திருவமுது படைத்தல், சீர் செய்தல், சீர்வரிசை வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிறைவாக நடைபெற்ற மஹாதீபாராதனையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சண்முகநதிக்கு அரோகரா என கோஷம் எழுப்பினர். விழா ஏற்பாடுகளை காணியாளர் நரேந்திரன், தங்கராஜ், சிவக்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.