பழனியில் போகரின் பழைமையான ஓலைச் சுவடிகளுக்கு மலர் வழிபாடு
By DIN | Published On : 04th August 2019 03:52 AM | Last Updated : 04th August 2019 03:52 AM | அ+அ அ- |

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் புலிப்பாணி ஆசிரமத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சனிக்கிழமை போகர் மற்றும் புலிப்பாணி சித்தர்களின் ஆயிரம் ஆண்டு பழைமையான ஓலைச்சுவடிகளுக்கு மலர்வழிபாடு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பதினெட்டு சித்தர்களுக்கு யாக பூஜையும், போகர் ஆதீனத்தின் இளைய பட்டம் அறிவிப்பும் நடைபெற்றது.
ஆடிப்பெருக்கை முன்னிட்டு அதிகாலையில் ஆசிரம வளாகத்தில் பிரமாண்ட யாக குண்டம் அமைக்கப்பட்டு, பழனி போகர் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தலைமையில் 18 சித்தர்களுக்கான ஹோமம், நவக்கிரக ஹோமம், சண்டி ஹோமம் ஆகியவை நடத்தப்பட்டு பூர்ணாஹூதி நடைபெற்றது.
பின்னர் சுவாமிகளுக்கு வருடாபிஷேகமும், ஜீவசமாதியில் உள்ள சிவலிங்கத்துக்கு அபிஷேக பூஜைகளும் நடத்தப்பட்டன. பின்னர் போகர் மற்றும் புலிப்பாணி சித்தர்களின் பழங்கால ஓலைச்சுவடிகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அம்பு, வில், நவபாஷாணங்கள் வைக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து சிவானந்த புலிப்பாணி ஆதீனம் மலர்கள் தூவி சிறப்பு வழிபாட்டை தொடக்கி வைத்தார். தொடர்ந்து பக்தர்கள்மலர்தூவி வழிபாடு நடத்தினர்.
விழா நிறைவில் போகர் புலிப்பாணி ஆசிரமத்தின் இளைய பட்டமாக செல்வநாதன் சுவாமிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, பழனி போகர் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் அறிவித்தார். இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.
விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு குங்குமம், ருத்திராட்சம், சுவாமி படங்கள் போன்ற பிரசாதங்களும், இனிப்புக்களும் வழங்கப்பட்டன. பூஜைகளில் ஜம்பு சுவாமிகள், நிர்வாகிகள் மருத்துவர் பன்னீர்செல்வம், கௌதம் கார்த்திக், யோகநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.