தந்தை இறப்புச் சான்றிதழில் திருத்தம் கோரி மாற்றுத் திறனாளி தீக்குளிக்க முயற்சி
By DIN | Published On : 06th February 2019 07:18 AM | Last Updated : 06th February 2019 07:18 AM | அ+அ அ- |

தந்தையின் இறப்புச் சான்றிதழில் திருத்தம் செய்து தரக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பார்வையற்ற மாற்றுத்திறனாளி செவ்வாய்க்கிழமை தீக்குளிக்க முயன்றார்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்துள்ள குல்லலக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (36). பார்வையற்ற மாற்றுத்திறனாளி. இவரது தந்தை குருசாமி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாராம்.
இந்நிலையில், குருசாமி பெயரிலுள்ள வீட்டை தனது பெயருக்கு பட்டா மாறுதல் செய்வதற்காக நாகராஜ் முயற்சித்துள்ளார். அப்போது, குருசாமியின் இறப்புச் சான்றிதழில், அவரது தந்தை பெயர் பூலாங்காட்டான் என்பதற்கு மாறாக சடையன் என குறிப்பிடப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து, இறப்புச் சான்றிதழில் திருத்தம் செய்வதற்காக, கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு சென்று நாகராஜ் முறையிட்டாராம். ஆனால், சான்றிதழை மாற்றிக் கொடுப்பதற்கு வருவாய்த்துறையினர் பணம் கேட்பதாகவும், 6 மாதங்களாக அலைகழித்தாகவும் கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தி அடைந்த நாகராஜ், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி செவ்வாய்க்கிழமை தீக்குளிக்க முயன்றார். இதனை அடுத்து, அந்த வழியாக சென்ற மாவட்ட வருவாய் அலுவலர் பா.வேலு, நாகராஜை சமாதானப்படுத்தி 15 நாளில் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...