ஊதியம் கிடைக்காமல் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் அவதி
By DIN | Published On : 12th February 2019 07:21 AM | Last Updated : 12th February 2019 07:21 AM | அ+அ அ- |

குஜிலியம்பாறை வட்டாரத்தில் பணிபுரியும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் 290 பேருக்கு, திங்கள்கிழமை வரை ஊதியம் கிடைக்காததால் அதிருப்தி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, ஜனவரி மாதத்துக்கான ஊதியம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. முதல் கட்டமாக, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடாத ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு பணிக்கு வராத நாள்களுக்கான ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டு, ஜனவரி மாதத்துக்கான ஊதியம் வழங்கப்பட்டது. இந்நிலையில், குஜிலியம்பாறை வட்டாரத்தில் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஊதியம் பிப்ரவரி 11ஆம் தேதி ஆகியும் இன்னும் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
குஜிலியம்பாறை வட்டாரத்தில் மட்டும் 98 அரசுத் தொடக்கப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், 290 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். குஜிலியம்பாறை, வடமதுரை, வேடசந்தூர் ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதியம், வேடசந்தூர் சார்-நிலைக் கருவூல அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
வடமதுரை மற்றும் வேடசந்தூர் வட்டாரங்களைச் சேர்ந்த தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதியம் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், குஜிலியம்பாறை வட்டாரத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு திங்கள்கிழமை வரை ஊதியம் வழங்கப்படாததால், அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக கல்வித் துறை அலுவலர் ஒருவர் கூறியது: உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டுவிட்டது. 2 நாள்களில் குஜிலியம்பாறை பகுதியைச் சேர்ந்த தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதியம் வழங்கப்பட்டு விடும் என்றார்.