காவல் ஆய்வாளர் ரூ.50ஆயிரம் லஞ்சம் கேட்பதாக புகார்: ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சி

தனது நிலம் தொடர்பான பிரச்னைக்குத் தீர்வுகாண செம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் ரூ.50 ஆயிரம் லஞ்சம்

தனது நிலம் தொடர்பான பிரச்னைக்குத் தீர்வுகாண செம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்பதாக புகார் தெரிவித்த முதியவர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
 திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அடுத்துள்ள பச்சமலையான் கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல் (57). இவர், அப் பகுதியில், மிக்ஸர் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், தங்கவேல் தனது மகன், மகள், மருமகள் ஆகியோருடன், மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தார்.
ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் அருகே வந்த அவர் திடீரென மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், அவர் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனர்.
பின்னர், போலீஸார் நடத்திய விசாரணையில் தங்கவேல் கூறியதாவது: செம்பட்டி-பழனி சாலையில் 327 சதுரடி இடத்தை ஜேம்ஸ் ஜார்ஜ் என்பவரிடமிருந்து கடந்த 2003 ஆம் ஆண்டில் விலைக்கு வாங்கினேன். எனது இடத்துக்கு அருகே ஜேம்ஸ் ஜார்ஜின் தம்பியான சேசுராஜ் என்ற சேஷய்யா என்பவருக்கும் இடம் உள்ளது. 
பின்னர், சேசுராஜ் தனது இடத்துடன் எனக்கு சொந்தமான இடத்தையும் சேர்த்து ஆக்கிரமித்துக்கொண்டார். 
இது குறித்து செம்பட்டி காவல் நிலைய ஆய்வாளரிடம் புகார் அளிக்க சென்றபோது, அனைத்து ஆவணங்களும் உனது பெயரில் உள்ளதால் அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார். அதன்பின்னர், எனது இடத்தில் கடை கட்டினேன்.
இந்நிலையில், ரூ. 50 ஆயிரம் கொடுத்தால் உனக்கு சாதமாக முடித்துக் கொடுக்கிறேன்  என, காவல் ஆய்வாளர் தெரிவித்தார். என்னிடம் பணம் கொடுக்கும் அளவுக்கு வசதியில்லை எனத் தெரிவித்தேன். உடனே, அந்த இடம் உனக்கு சொந்தமில்லை. நீ வைத்திருப்பது போலியான பத்திரம்,  உடனடியாக இடத்தை காலி செய்துவிடு என மிரட்டினார். மேலும், எனது கடைக்கு வந்து பொருள்களை வெளியே தூக்கி எறிந்தார். என் மீதும், குடும்பத்தினர் மீதும் வழக்குப் பதிவு செய்துவிடுவதாகவும் மிரட்டினார். இதனிடையே, சேசுராஜ்  மற்றும் ஆல்பர்ட் ஆகியோரும் கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு, எங்கள் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் எனத் தெரிவித்தார். 
அவரை சமாதானப்படுத்திய போலீஸார், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் மனு அளிக்க அழைத்துச் சென்றனர். முதியவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம், ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com