தவசிமடையில் ஜல்லிக்கட்டு: 527 காளைகள் பங்கேற்பு; 19 பேர் காயம்
By DIN | Published On : 12th February 2019 07:15 AM | Last Updated : 12th February 2019 07:15 AM | அ+அ அ- |

திண்டுக்கல் அடுத்துள்ள தவசிமடையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில், 527 காளைகள் பங்கேற்றன. இதில், 19 பேர் காயமடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அடுத்துள்ள தவசிமடை புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில், திண்டுக்கல், தேனி, சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 531 காளைகள் பங்கேற்க அழைத்து வரப்பட்டன.
கால்நடை மருத்துவர்களின் பரிசோதனையின்போது, 4 காளைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, 527 காளைகள் மட்டுமே பங்கேற்றன. அதேபோல், மாடுபிடி வீரர்கள் 405 பேருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், 13 பேருக்கு அனுமதி மறுக்கப்பட்டு, 392 வீரர்கள் களம் இறங்கினர்.
இப்போட்டியை, திண்டுக்கல் கோட்டாட்சியர் ரா. ஜீவா தொடக்கி வைத்தார். போட்டியில், சீறப் பாய்ந்த காளைகளை பிடிக்க முயன்ற வீரர்களில் 19 பேர் காயமடைந்தனர். இதில் பலத்த காயமடைந்த 2 பேர் தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். போட்டியில் ஒரு காளையும் காயமடைந்தது.
ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் தங்கக் காசு, வெள்ளிக் காசு, மிக்ஸி, மின்விசிறி உள்ளிட்ட பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...