செங்காந்தள் மலர் சாகுபடியை ஊக்குவிக்க அரசு கொள்முதல் மையம் அமைக்குமா?
By DIN | Published On : 04th January 2019 01:15 AM | Last Updated : 04th January 2019 01:15 AM | அ+அ அ- |

செங்காந்தள் மலர் சாகுபடி விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் அரசே கொள்முதல் மையங்களை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசின் தேசிய மலராக விளங்குவது செங்காந்தள் மலர். புற்றுநோய், மூட்டுவலி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாக விளங்கும் இந்த தாவரத்தை கிராமங்களில் கண்வலி கிழங்கு செடி என்று அழைக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் செங்காந்தள் மலர் சாகுபடி செய்யப்படுகிறது.
ஆடி மாதத்தில் பயிர் செய்யப்படும் இந்த மலர் தை, மாசி மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது. கிழங்குகளை நட்டு அதில் வளரும் செடி படர்ந்து வளர விளைநிலங்களில் பந்தல் அமைக்கப்படுகிறது. செடி நன்கு வளர்ந்த பின்னர் அதில் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் செங்காந்தள் மலர் மலர்கிறது. மலர் முதிர்ந்தவுடன் அதில் சிறிய காய்கள் உருவாகின்றன. அதில் மிளகுபோல விதைகள் காணப்படும்.
காய்கள் சேகரிக்கப்பட்டு நன்கு உலரவைக்கப்பட்டு பின்னர் விதைகளை சேகரித்து விற்பனை செய்யப்படுகின்றன. விதையின் தரம், காய்ந்த தன்மையைப் பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த மலரை சாகுபடி செய்யும் விவசாயிகள் அறுவடை முடிந்த பின் சுமார் ஆறு மாதங்கள் நிலத்தை வெறுமனே விட வேண்டிய நிலை உள்ளது. இந்த விதையை சில தனியார் நிறுவனங்கள் வாங்கி பல்வேறு நாடுகளுக்கு மருத்துவப் பொருளாக ஏற்றுமதி செய்கின்றன. இவற்றை வாங்குவதற்கு சிலர் மட்டுமே இருப்பதால் அவர்கள் நிர்ணயிக்கும் விலையே விவசாயிகளுக்கு கிடைக்கிறது. ஆனால் வெளி நாடுகளுக்கு பல மடங்கு விலை உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இதை வாங்கி விற்கும் இடைத்தரகர்களே அதிகமான லாபம் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தொப்பம்பட்டியைச் சேர்ந்த விவசாயி பழனிச்சாமி கூறியது: செங்காந்தள் மலர் சாகுபடிக்கான தரமான விதைக்கிழங்கை கர்நாடகம் போன்ற வெளிமாநிலங்களில்தான் வாங்கி வரவேண்டி உள்ளது. ஒரு ஏக்கருக்கு சுமார் 600 கிலோ வரை விதைக்கிழங்கை வாங்கி நட வேண்டும். ஒரு கிலோ விதைக்கிழங்கு சுமார் ரூ. 600 முதல் 700 வரை விற்பனையாகிறது.
இவற்றை சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.5 லட்சத்துக்கு மேல் செலவாகிறது. ஆனால் விதையை விற்கும்போது வியாபாரிகள் வைப்பதே விலையாக உள்ளது. தற்போது இதன் விலை ஒரு கிலோவுக்கு ரூ.3000 ஆயிரம் வரையில் உள்ளது. ஆனால் வெளிநாடுகளில் இதன் விலை ஒரு கிலோவுக்கு சுமார் 12ஆயிரம் வரை உள்ளதாக கூறுகின்றனர்.
தற்போது பனியால் அறுவடையும் பாதிப்படைந்துள்ளது. ஆகவே, நெல், மக்காச்சோளம், சூரியகாந்தி போல செங்காந்தள் மலருக்கும் அரசே கொள்முதல் மையம் அமைக்க முன்வரவேண்டும் என்றார்.