மணல் அள்ளுவதில் இருதரப்பினர் மோதல்: பொக்லைன், டிராக்டர் பறிமுதல்
By DIN | Published On : 04th January 2019 01:17 AM | Last Updated : 04th January 2019 01:17 AM | அ+அ அ- |

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே குளத்தில் அனுமதியின்றி மணல் அள்ளுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, பொக்லைன் மற்றும் டிராக்டரை போலீஸார் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
நத்தம் அடுத்துள்ள காக்காபட்டி கொண்டன்குளத்தில் அனுமதியின்றி மணல் அள்ளுவது தொடர்பாக, அப்பகுதியைச் சேர்ந்த அதிமுகவினரிடையே போட்டி இருந்து வந்தது. இந்நிலையில், நத்தம் கோவில்பட்டியைச் சேர்ந்த கண்ணன் என்பவர், பொக்லைன் மூலம் டிராக்டரில் மணல் அள்ளுவதற்காக வியாழக்கிழமை சென்றுள்ளார். இதனை அறிந்த, நத்தம் பேரூராட்சி முன்னாள் உறுப்பினர் சிவா மற்றும் அவரது ஆதரவாளர்கள் இதை தடுத்துள்ளனர். இதில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த நத்தம் காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று மணல் அள்ளிக் கொண்டிருந்த டிராக்டர் மற்றும் பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், கொண்டன் குளத்தில், பகல் நேரங்களிலும் மணல் திருட்டு நடைபெறுகிறது. இரு தரப்பினருக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக தற்போது காவல்துறையினர் தலையிட்டுள்ளனர். இனி இப் பகுதியில் மணல் திருட்டு நடைபெறாமல், காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் தடுக்க வேண்டும் என்றனர்.