மாநில கூடைப் பந்தாட்டப் போட்டி: திண்டுக்கல்லில் நாளை தொடக்கம்: தினமணி ஆசிரியர் தொடக்கி வைக்கிறார்
By DIN | Published On : 04th January 2019 01:15 AM | Last Updated : 04th January 2019 01:15 AM | அ+அ அ- |

திண்டுக்கல்லில் சனிக்கிழமை (ஜன.5) தொடங்கும் மாநில அளவிலான மகளிர் கூடைப்பந்தாட்டப் போட்டியை, தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தொடக்கி வைத்து சிறப்புரை நிகழ்த்துகிறார்.
தினமணி மற்றும் திண்டுக்கல் வரதராஜா காம்ப்ளக்ஸ் ஸ்ரீவாசவி தங்க மாளிகை இணைந்து நடத்தும் இந்த மகளிர் கூடைப் பந்தாட்டப் போட்டி சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறுகிறது.
திண்டுக்கல் ஆர்எம்.காலனி மாநகராட்சி கூடைப் பந்தாட்ட மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களிலிருந்து 8 அணிகள் கலந்து கொள்கின்றன. நாக் அவுட் மற்றும் லீக் முறையில் போட்டிகள் நடைபெறுகின்றன.
நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கும் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன், சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் க.ஜோஷி நிர்மல்குமார் ஆகியோர் போட்டியை தொடக்கி வைத்து சிறப்புரை நிகழ்த்துகின்றனர். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் மூத்த துணைத் தலைவர்(வர்த்தகம்) ஜெ.விக்னேஷ்குமார், வரதராஜா காம்ப்ளக்ஸ் ஸ்ரீவாசவி தங்க மாளிகை உரிமையாளர் மேடா என்.ரவி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
முதலிடம் பெறும் அணிக்கு ரூ.20ஆயிரம், 2ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.15ஆயிரம், 3ஆம் இடம் பெறும் அணிக்கு ரூ.12ஆயிரம், 4ஆம் இடம் பெறும் அணிக்கு ரூ.8ஆயிரம் வீதம் ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது. மேலும், போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளுக்கும் கேடயம் வழங்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமை வகித்து, வெற்றிப் பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கிப் பேசுகிறார். போட்டிக்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலர் செ.சௌந்தரராஜன், மாவட்ட கூடைப் பந்தாட்டக் கழகத் தலைவர் ஏ.எம்.யூசுப் அன்சாரி, செயலர் சி.செண்பகமூர்த்தி ஆகியோர் செய்து வருகின்றனர்.