கொடைக்கானலில் மீன் பண்ணை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

கொடைக்கானல் அருகே மீன் பண்ணை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர்

கொடைக்கானல் அருகே மீன் பண்ணை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை பேச்சு வார்த்தை நடைபெற்றது.
கொடைக்கானலில் மீன்வளத்துறை சார்பில் மேல்மலைக் கிராமமான மன்னவனூர் பகுதியில் சுமார் 3 ஏக்கர் பரப்பில் மீன் பண்ணை அமைக்க திட்டமிடப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பாக அதற்கான பணிகள் தொடங்கின. இதற்காக அப் பகுதியில் அஸ்திவாரம் தோண்டும் பணிகள் நடைபெற்றன.
இந்நிலையில் இப் பகுதியில் மீன் பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து  அப்பகுதி மக்கள் அங்கு பணியில் ஈடுபட்டவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள் இது குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.  இதைத் தொடர்ந்து கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இது குறித்து ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.இதற்கு வட்டாட்சியர்  ரமேஷ் தலைமை வகித்தார். டி.எஸ்.பி. பொன்னுச்சாமி முன்னிலை வகித்தார்.  
இதில் கிராம மக்கள் கூறியது: மன்னவனூர் பகுதியில் தற்போது அமைக்கப்படவுள்ள மீன்பண்ணையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கோணலாறு பகுதியிலிருந்து வரும் தண்ணீர் தளவாய் ஓடை வழியாக கவுஞ்சி கிராமத்துக்கு குடிநீராகவும், பாசனத்துக்காகவும், கால்நடைகளுக்கும் பயன்படுகிறது. 
இந்நிலையில் இங்கு மீன் பண்ணை அமைத்தால் இதிலிருந்து வெளியேறும் கழிவுகளால் நீர் மாசடைந்து பல்வேறு விதமான நோய்கள் வர வாய்ப்புள்ளது . எனவே இப் பகுதியில் மீன் பண்ணை அமைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இது குறித்து  அப் பகுதியில் வருவாய் கோட்டாட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்த பின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என வட்டாட்சியர் தெரிவித்தார். இப்பகுதியில் மீன் பண்ணை அமைப்பதற்கு பணிகளைத் தொடங்கினால் போராட்டம் நடத்துவோம் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com