"மாணவிகள் படிக்கும் காலங்களில் ஆராய்ந்து முடிவு எடுத்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும்'
By DIN | Published On : 03rd July 2019 07:20 AM | Last Updated : 03rd July 2019 07:20 AM | அ+அ அ- |

மாணவிகள் படிக்கும் காலங்களில் ஆராய்ந்து முடிவு எடுத்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும் என, கல்வியாளர் ரமேஷ்பிரபா தெரிவித்துள்ளார்.
கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டியிலுள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில், முதுகலை முதலாம் ஆண்டு மாணவிகளை வரவேற்கும் நிகழ்ச்சி மற்றும் மாணவிகளுக்கான விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி பல்கலைக்கழக அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், பல்கலைக்கழகத் துணைவேந்தர் வைதேகி விஜயக்குமார் தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்துப் பேசினார். பதிவாளர் சுகந்தி முன்னிலை வகித்தார். இதில், கல்வியாளர் ரமேஷ் பிரபா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியதாவது: மாணவிகள் படிக்கும் காலங்களில் பகுத்தறிவு, சுயஒழுக்கத்துடன் இருப்பது அவசியம். குடும்ப சூழ்நிலையை உணர்ந்தால் நிச்சயமாக நாம் வாழ்வில் முன்னேற முடியும். மாணவிகள் எப்போதும் தனியாக இருக்கக் கூடாது. மாணவிகள் பல மொழிகளை கற்றுக்கொள்ளலாம், ஆனால் திணிக்கக் கூடாது.
தேர்வு முடிவுகளில் தோல்வியடைந்தவுடன் பெரும்பாலும் மாணவிகளே தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்த முடிவை மாணவிகள் கைவிட வேண்டும். எந்தத் துறையை தேர்ந்தெடுத்தாலும் விடாமுயற்சி செய்து அதில் வெற்றி பெறவேண்டும். பெற்றோர்கள் மாணவிகளுக்கு சுதந்திரம் கொடுத்தாலும், அவர்களை கண்காணிப்பதில் தவறக்கூடாது.
மாணவிகள் நிதானமாகவும், ஆராய்ந்தும் முடிவு எடுத்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம் என்றார். இதில், பல்கலைக்கழகக் கல்லூரிப் பேராசிரியைகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனர்.