ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள்: திண்டுக்கல், தேனியில் 8,609 பேர் பங்கேற்பு
By DIN | Published On : 09th June 2019 02:50 AM | Last Updated : 09th June 2019 02:50 AM | அ+அ அ- |

திண்டுக்கல், தேனி மாவட் டங்களில் 8,609 பேர் சனிக்கிழமை ஆசிரியர் தகுதித் தேர்வை (முதல் தாள்) எழுதினர்.
தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வு சனி, ஞாயிறு என 2 நாள்கள் நடைபெறுகின்றன. முதல் தாள் தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 987 ஆண்கள் மற்றும் 4,780 பெண்கள் என மொத்தம் 5767 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்காக திண்டுக்கல், பழனி, வத்தலகுண்டு, வேடசந்தூர் பகுதிகளில் மொத்தம் 14 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் விண்ணப்பித்தவர்களில் 880 ஆண்கள் மற்றும் 4260 பெண்கள் என மொத்தம் 5140 பேர் மட்டுமே முதல் தாள் தேர்வில் பங்கேற்றனர். 107 ஆண்கள் மற்றும் 520 பெண்கள் என மொத்தம் 627 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.
தேர்வு நடைபெற்ற மையங்களில் இணை இயக்குநர் (ஒருங்கிணைந்த கல்வித் திட்டம்) அருள் முருகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கு.சொ.சாந்தகுமார், மாவட்ட கல்வி அலுவலர்கள் முத்துகிருஷ்ணன், சுப்பிரமணி, கருப்புசாமி, பாண்டித்துரை ஆகியோர் பார்வையிட்டனர்.
தேனி: தேனி மாவட்டத்தில் சனிக்கிழமை இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வை (முதல் தாள்) 3,469 பேர் எழுதினர். தேனி, உத்தமபாளையம் வட்டாரங்களில் 9 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் இத்தேர்வு நடைபெற்றது.
இத் தேர்வுக்கு மொத்தம் 3,911 பேர் விண்ணப்பித்திருந்ததில், 3,469 பேர் தேர்வு எழுதினர். 442 பேர் தேர்வு எழுத வரவில்லை. ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 நடைபெறுகிறது.