கொடைக்கானல் சுற்றுலா வழிகாட்டி விபத்தில் பலி
By DIN | Published On : 09th June 2019 02:51 AM | Last Updated : 09th June 2019 02:51 AM | அ+அ அ- |

கொடைக்கானலைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி திண்டுக்கல் அருகே சனிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.
திண்டுக்கல் அடுத்துள்ள மீனாட்சிநாயக்கன்பட்டி அடுத்துள்ள 4 வழிச்சாலையின் (திண்டுக்கல்-கரூர்) நடுவே ஒரு ஆண் சடலம் கிடப்பதாக தாடிக்கொம்பு போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார், சடலத்தைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், உயிரிழந்தவர் கொடைக்கானல் அண்ணாநகரைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி மு.முரளி(37) என்பது தெரிய வந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது விபத்தில் உயிரிழந்தாரா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் தெரிவித்ததாவது: மீனாட்சிநாயக்கன்பட்டி பகுதியிலுள்ள தனது உறவினர் வீட்டிற்கு அவர் வந்திருக்கலாம். அங்கிருந்து வெளியே வந்தவர் 4 வழிச்சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி நிகழ்ந்த விபத்தில் உயிரிந்துள்ளார்.
மருத்துவ பரிசோதனையிலும் விபத்தில் உயிரிழந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. எனினும் தொடர்ந்து அவரது குடும்பத்தினரிடம் விசாரித்து வருவதாக தெரிவித்தனர்.