திண்டுக்கல் மாவட்ட கலைஞர்கள் கலை விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 09th June 2019 02:51 AM | Last Updated : 09th June 2019 02:51 AM | அ+அ அ- |

கலைப்பண்பாட்டுத் துறை சார்பில் வழங்கப்படும் விருதினை பெற தகுதியான திண்டுக்கல் மாவட்ட கலைஞர்கள் ஜூன் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழகத்தின் கலைப் பண்புகளை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் கலைஞர்களின கலைத் திறனை சிறப்பிக்கும் வகையில் கலைப் பண்பாட்டுத் துறை சார்பில் விருது வழங்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆண்டுதோறும் வயது மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் சிறந்த 5 கலைஞர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. 2018-19 ஆம் ஆண்டுக்கான கலை விருதுகள் வழங்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேர்வாளர் குழு அமைக்கப்படவுள்ளது.
எனவே திண்டுக்கல மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் விண்ணப்பங்கள் அளிக்கலாம். 18 வயதுக்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு கலை இளமணி, 19 முதல் 35 வயதுக்குள்பட்டவர்களுக்கு கலை வளர்மணி, 36 முதல் 50 வயதுக்குள்பட்டவர்களுக்கு கலைச் சுடர்மணி, 51 முதல் 60 வயதுக்குள்பட்டவர்களுக்கு கலை நன்மணி, 61 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கலை முதுமணி என்ற நிலையில் விருதுகள் வழங்கப்படும்.
தேர்வு பெறும் கலைஞர்களுக்கு பொற்கிழி பட்டயம் மற்றும் பொன்னாடை வழங்கப்படும். தேசிய விருதுகள், மாநில விருதுகள்(கலைமாமணி) மற்றும் ஏற்கெனவே மாவட்டக் கலை மன்றத்தின் விருதுகளைப் பெற்ற கலைஞர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க கூடாது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விருது பெறத் தகுதியான கலைஞர்கள், விண்ணப்பத்துடன் வயது, முகவரி மற்றும் கலை அனுபவச் சான்றுகளின் நகல்களுடன்(தொலைபேசி எண்ணுடன்) உதவி இயக்குநர், மண்டலக் கலை பண்பாட்டு மையம், பாரதி உலா முதல் தெரு, ரேஸ் கோர்ஸ் காலனி, தல்லாகுளம் (அ), மதுரை -625002 என்ற முகவரிக்கு ஜூன் 15ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இதுதொடர்பான கூடுதல் தகவல்களை பெற 0452-2566420 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.