பழனியில் குப்பைக்கிடங்காக மாறும் பூங்காக்கள்: பொதுமக்கள் அவதி
By DIN | Published On : 09th June 2019 02:50 AM | Last Updated : 09th June 2019 02:50 AM | அ+அ அ- |

பழனியில் குடியிருப்புகள் மத்தியில் இருக்கும் பூங்காக்கள் குப்பைக்கிடங்காக மாற்றப்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
பழனிக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இருப்பினும் நகரில் பொழுதுபோக்குக்கென எந்த வசதியும் இல்லாத நிலை இருந்தது. இதனால், குடியிருப்புகளுக்கு மத்தியில் பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்ட இடங்களில் சமீபத்தில் நகராட்சி சார்பில் பூங்காக்கள் கட்டப்பட்டன. ஆனால் அந்த பூங்காக்கள் பராமரிப்பு இல்லாததால் நாளடைவில் சேதமடைந்து பயனற்ற நிலையில் இருந்து வந்தன.
இந்த நிலையில், தற்போது பூங்காக்கள் அனைத்தும் குப்பைக்கிடங்காக மாற்றப்பட்டு உரக்கிடங்காக மாறியுள்ளன. இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் துர்நாற்றத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியது: அரசு உத்தரவின் பேரிலேயே பூங்காக்கள் அனைத்தும் உரக்கிடங்காக மாற்றப்பட்டு வருகின்றன என்றனர்.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பழனி நகரச் செயலாளர் கந்தசாமி கூறும்போது, திண்டுக்கல் போன்ற பெருநகரங்களில் இதுபோன்ற குப்பைக்கிடங்குகளை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கிபோது மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கைவிட்டனர். ஆனால் பழனியில் நகராட்சி அதிகாரிகள் மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்வதில்லை. பல நகராட்சி நூலகங்கள் நூலகர்கள் இல்லாமல் பூட்டிக் கிடக்கின்றன. பூங்காக்கள் பராமரிப்பு இல்லாததால் சந்தைகளாகவும், குடோனாகவும் மாறிவருகின்றன. இதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விரைவில் போராட்டம் நடத்தவுள்ளது என தெரிவித்தார்.