ஒட்டன்சத்திரத்தில் மழை அளவு குழப்பம்: மழை மானியை சீரமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 14th June 2019 07:17 AM | Last Updated : 14th June 2019 07:17 AM | அ+அ அ- |

ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சேதமடைந்த மழைமானியை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மழை அளவை குறிக்கும் வகையில் மழைமானி வைக்கப்பட்டது. அதில் இருந்து மழைக்காலத்தில் இப்பகுதியில் எவ்வளவு மழை பதிவானது என்று கணக்கீடு செய்யப்படும். தற்போது அந்த மழைமானி சேதமடைந்து செயலிழந்துவிட்டது. இதனால் பரப்பலாறு அணை மற்றும் சத்திரப்பட்டி பகுதியில் வைக்கப்பட்டு இருக்கும் மழை மானியில் இருந்து ஒட்டன்சத்திரம் பகுதியில் எவ்வளவு மழை பெய்தது என்று கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஒட்டன்சத்திரத்தில் மழையே பெய்யாமல் மழை பெய்ததாக கூறுவதை அறிந்து பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர். எனவே வருகிற மழைக்காலத்திற்குள் ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சேதமடைந்து செயலிழந்த மழை மானியை சரிசெய்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.