திண்டுக்கல் மாவட்ட நீர்நிலைகளில் 393 ஏக்கர் ஆக்கிரமிப்பு அகற்றம்: ஆட்சியர்
By DIN | Published On : 14th June 2019 07:19 AM | Last Updated : 14th June 2019 07:19 AM | அ+அ அ- |

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 637 நீர்நிலைகளில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 393 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்ந்து போன நீர்நிலைகளை மீட்டெடுத்து பாதுகாப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இதுவரை பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 637 குளங்கள் நில அளவை(சர்வே) செய்யப்பட்டு 393 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.
மேலும், தனியார் பங்களிப்புடன் நீர்நிலைகளுக்கான வரத்து வாய்க்கால்களை சுமார் 200 கி. மீட்டர் தூரத்திற்கு தூர்வாரப்பட்டு, 338 குளங்கள் தூர்வாரி புதுப்பிக்கப்பட்டுள்ளன.
அதேபோல் மாவட்டத்திலுள்ள அனைத்து குளங்களின் அமைவிடம், குளத்தின் தன்மை, மொத்தப்பரப்பு, சர்வே எண், எல்லை விவரம் ஆகிய அனைத்தும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், ஒவ்வொரு குளத்திற்கும் தனித்தனியே தகவல் பலகை அமைக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பொதுப்பணித்துறைகட்டுப்பாட்டிலுள்ள அனைத்து நீர்நிலைகளின் முழு https://dindigul. nic.in என்ற திண்டுக்கல் மாவட்ட இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் தங்கள் பகுதியிலுள்ள கிராம நீராதாரங்களை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகள் அகற்றவும் அரசுக்கு உடனுக்குடன் தகவல் அளிக்க பொதுமக்கள் துணை நிற்க வேண்டும் என
கேட்டுக் கொண்டுள்ளார்.