பழனியில் வாடகைக்கு இயங்கிய 2 சொகுசு கார் உரிமையாளர்கள் மீது வழக்கு
By DIN | Published On : 14th June 2019 07:18 AM | Last Updated : 14th June 2019 07:18 AM | அ+அ அ- |

பழனியில் வாடக்கைக்கு இயங்கி இரண்டு சொகுசு கார்களை வாடகைக்கார் ஓட்டுனர் சங்கத்தினர் பிடித்து ஆயக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
பழனியில் சில தனியார் சொகுசு கார்கள் வாடகைக்கு இயக்கப்படுவதால் வாடகை கார் ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வந்தது. கடந்த மாதம் கொடைக்கானல் சாலையில் வாடகைக்குச் சென்ற காரை சிறைப் பிடித்து வாடகைக்கார் ஓட்டுநர் சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.
மேலும், கடந்த வாரம் திண்டுக்கல் சாலையில் வாடகைக்கு சென்ற தனியார் காரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில் புதன்கிழமை பழனி திண்டுக்கல் சாலையில் ஆயக்குடி அருகே மதுரை மற்றும் தேனிக்கு சென்ற இரு தனியார் சொகுசு கார்களை வாடகைக்கார் ஓட்டுநர் சங்கத்தினர் பிடித்து ஆயக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து ஆயக்குடி போலீஸார் கார் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து வாடகைக்கார் ஓட்டுநர் சங்க நிர்வாகி ரவிச்சந்திரன் கூறியது:
இது போன்ற செயல்களால் எங்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, அரசுக்கும் இழப்பு ஏற்படுகிறது. இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.