இடையகோட்டை அருகே கோயில் விழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைப்பு
By DIN | Published On : 06th March 2019 07:35 AM | Last Updated : 06th March 2019 07:35 AM | அ+அ அ- |

மகா சிவராத்திரியை முன்னிட்டு, ஒட்டன்சத்திரம் அடுத்த இடையகோட்டை அருகேயுள்ள மகாலட்சுமி அம்மன் கோயிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், வலையபட்டியில் இராயர் குல வம்சம் குரும்பர் இன மக்களுக்கு பாத்தியப்பட்ட மகாலட்சுமி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் மகா சிவராத்திரி விழா 150-ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இக்கோயிலில் சிவராத்திரி விழா, மாசி மாதம் 20-ஆம் நாள் தொடங்கி 23-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த திருவிழாவின் சிறப்பு அம்சமாக பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தப்படுகிறது. இதில், செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் 9 மணி வரை மகாலட்சுமி அம்மன் பூப்பல்லக்கில் துறைமுகம் சென்றடைதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
மதியம் 1 மணிக்கு மேல் கோயில் முன்பாக நடைபெற்ற தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியில், பரம்பரையாளர்கள் தலையில் முதல் தேங்காயை பூசாரி பூச்சப்பன் உடைத்தார். அதன்பின்னர், 20-க்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இத்திருவிழாவில், திண்டுக்கல், கரூர், திருச்சி, பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G