இரவு நேரப் பணிகளால் தேர்தல் பறக்கும் படை பெண் அதிகாரிகள் அவதி

தேர்தலை முன்னிட்டு, பறக்கும் படை குழுவில் உள்ள பெண் அதிகாரிகள் இரவு நேரங்களில் பல்வேறு அவதிக்குள்ளாவதாக புகார் எழுந்துள்ளது. 
Updated on
1 min read

தேர்தலை முன்னிட்டு, பறக்கும் படை குழுவில் உள்ள பெண் அதிகாரிகள் இரவு நேரங்களில் பல்வேறு அவதிக்குள்ளாவதாக புகார் எழுந்துள்ளது. 
மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இரவு நேரங்களில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபடுகின்றனர். 
திண்டுக்கல் மாவட்டத்திலும் ஒவ்வொரு தாலுகாவாரியாக பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.  இந்த படையில் ஓட்டுநருடன் கூடிய வாகனத்தில் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் அளவிலான அதிகாரி,  சார்பு-ஆய்வாளர் மற்றும் ஒரு காவலர், ஒரு ஒளிப்பதிவாளர் என மொத்தம் 5 பேர் உள்ளனர். 
     இதில், பறக்கும் படையில் ஏராளமான பெண் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரும் இரவு நேரப் பணிகளில் ஈடுபட்டு வருவதால், பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 
இது குறித்து ஒரு பெண் அலுவலர் கூறியது: 
இரவு நேரங்களில் பெண்களை பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளதால், இரவு முழுக்க நெடுஞ்சாலைகளில் தனியே நிற்பதில் பல்வேறு தொந்தரவுகள் உள்ளன.  வாகனங்களை மோதுவது போல ஓட்டி வருவது, உடன் பெண் காவலர்கள் இல்லாமல் இருப்பது, மது போதையில் வருபவர்களிடம் விசாரணை செய்வது என்பன உள்ளிட்ட சொல்ல முடியாத சிரமங்கள் நிறைய உள்ளன.  இயற்கை உபாதைக்கு செல்ல கூட அச்சமாக உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர், மண்டல அலுவலர்களிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, பகல் நேரங்களில் முறையாக 8 மணி நேரமாகப் பிரித்து பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com