பெரியப்பா நகரில் பழுதான ஆழ்குழாய்களை சீரமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 05th May 2019 01:26 AM | Last Updated : 05th May 2019 01:26 AM | அ+அ அ- |

பழனி பெரியப்பா நகரில் பழுதான ஆழ்குழாய் மோட்டார்களை சீரமைக்க நகராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழனியில் கடந்த கோடை காலத்தின் போது நகராட்சி நிர்வாகம் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் அனைத்து வார்டுகளிலும் ஆழ்குழாய்கள் அமைத்து தண்ணீர் விநியோகம் செய்தது.
பின்னர் கோடை காலம் முடிந்து மழை பெய்த பிறகு இந்த ஆழ்குழாய்கள் பராமரிக்கப்பட வில்லை. தற்போது கோடைகாலம் துவங்கிவிட்ட நிலையில் பழனியில் தண்ணீர் தட்டுப்பாடும் தலையெடுக்க தொடங்கிவிட்டது.
பழனி நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டும் கோடைகால நீர்த்தேக்கம், பாலாறு அணை போன்ற நீர்நிலைகளில் தண்ணீர் வெகுவாக குறைந்து வரும் நிலையில் நகராட்சி சார்பில் தற்போது வாரம் இருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது. வீட்டின் பிற தேவைகளுக்கு பொதுமக்கள் ஆழ்குழாய் மூலமே தண்ணீர் பெற்று வருகின்றனர்.
பழனி பழையதாராபுரம் சாலையில் உள்ள பெரியப்பா நகரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் பல பகுதிகளிலும் ஆழ்குழாய்களுக்கான மோட்டார்கள், குழாய் இணைப்புகள் பழுதடைந்து காணப்படுவதால் பொதுமக்கள் தண்ணீருக்கு பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதனால் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட சின்டெக்ஸ் தொட்டிகளிலும் தண்ணீர் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே, பழனி நகராட்சி நிர்வாகம் உடனடியாக ஆழ்குழாய் மோட்டார், குழாய் இணைப்புகளை சீரமைத்து தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.