குடிநீர் கோரி ஆத்தூரில் பொதுமக்கள் சாலை மறியல்
By DIN | Published On : 15th May 2019 06:57 AM | Last Updated : 15th May 2019 06:57 AM | அ+அ அ- |

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே உள்ள ஆத்தூர் ஊராட்சி பகுதி மக்கள் முறையாக குடிநீர் விநியோகிக்கக் கோரி செம்பட்டி-சித்தையன்கோட்டை சாலையில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி, செம்பட்டி காவல் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 2 நாள்களில் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினர். இதை ஏற்றுக் கொள்ளாத கிராம மக்கள் எங்கள் ஊராட்சியில் உள்ள காமராஜர் நீர்த்தேக்கத்திலிருந்து திண்டுக்கலுக்கு குடிநீர் செல்கிறது. ஆனால் வழியோர கிராமமான ஆத்தூருக்கு குடிநீர் தர திண்டுக்கல் மாநகராட்சி மறுக்கிறது எனக் கூறினர். இதையடுத்து மறியலிலில் ஈடுபட்டவர்களை கைது செய்வோம் என போலீஸார் எச்சரிக்கை விடுத்தும் பொதுமக்கள் கலைந்து செல்லவில்லை. இதனால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் சவரியார்தெருவைச் சேர்ந்த கிளாரா (55) மயங்கி கீழே விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
இதையடுத்து 2 நாள்களில் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.