மழை வேண்டி நத்தத்தில் பெண்கள் சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 15th May 2019 06:55 AM | Last Updated : 15th May 2019 06:55 AM | அ+அ அ- |

நத்தம் பகுதியில் மழை பெய்ய வேண்டி பெண்கள் பால் குடம் எடுத்துச் சென்று மாரியம்மனுக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மழை பெய்ய வேண்டி கோயில்கள் மற்றும் மசூதிகளில் வருண ஜெப யாகம் நடத்தப்பட்டது. இந்நிலையில், நத்தம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை பெய்ய வேண்டி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் செவ்வாய்க்கிழமை பால்குடம் எடுத்துச் சென்று மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
இதையொட்டி, நத்தம் அண்ணாநகர் பக்தர்கள் சார்பில், 100-க்கும் மேற்பட்ட பெண்கள் அங்குள்ள செல்வ விநாயகர் கோயிலிலிருந்து பால்குடத்துடன் ஊர்வலமாக செவ்வாய்க்கிழமை புறப்பட்டனர். இந்த ஊர்வலம் நத்தம் பேருந்து நிலையம், அரிசி கடை வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வந்து மாரியம்மன் கோயிலை அடைந்தது. அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மழை வேண்டி அம்மனை வழிபட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை அண்ணாநகர் பொதுமக்கள் செய்திருந்தனர்.