பழனியில் பிரசவத்தில் பிறந்த குழந்தை இறந்ததால் தனியார் மருத்துவமனை முற்றுகை
By DIN | Published On : 19th May 2019 03:46 AM | Last Updated : 19th May 2019 03:46 AM | அ+அ அ- |

பழனியில் பிறந்த குழந்தை இறந்ததால் தனியார் மருத்துவமனையை உறவினர்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி புதுதாராபுரம் சாலையில் மகளிர் நல மருத்துவமனை இயங்கி வருகிறது. இதன் மருத்துவர் வசந்தா. கடந்த சில தினங்களுக்கு முன் பெங்களூரில் இருந்து அஷ்ரப்நிஷா(30) என்பவர் பிரசவத்துக்காக இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். வியாழக்கிழமை அஷ்ரப் நிஷாவுக்கு பிரசவ வலி ஏற்ப்பட்டதால் உடனடியாக மருத்துவர் வசந்தாவின் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.
அடுத்த 4 மணி நேரத்தில் அஷ்ரப் நிஷாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த சில மணி நேரங்களில் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்படவே, பழனியில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை மருத்துவர் வசந்தா அனுப்பியுள்ளார். அங்கும் போதிய வசதிகள் இல்லாததால் பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக குழந்தை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல்கிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இறந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அஷ்ரப்நிஷாவின் உறவினர்கள் ஏராளமானோர் மருத்துவமனைக்கு வந்து மருத்துவர் வசந்தாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பல்வேறு மருத்துவமனை மருத்துவர்கள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.
இதுகுறித்து மருத்துவர் வசந்தா கூறியது: இங்கு சிகிச்சை பெற வருவோர்க்கு "ஸ்கேன்' கூட இலவசமாக எடுக்கிறேன். குழந்தை தாயின் கருப்பையில் இருந்த போது வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, அந்த நீருடன் இருந்ததால் வயிற்றுக்குள் பிரச்னை ஏற்பட்டுள்ளது. குழந்தை பிறந்தவுடன் பல்வேறு முதலுதவி செய்து மேல்சிகிச்சைக்கு மதுரைக்குச் சென்று இறந்துள்ளது. குழந்தை பிறந்த பிறகு தான் அதற்கு என்ன உபாதை என கண்டறிய முடியும் என்றார்.