தேஜஸ் அதிவிரைவு ரயிலுக்கு திண்டுக்கல்லில் நிறுத்தம் வழங்கக் கோரிக்கை
By DIN | Published On : 19th May 2019 03:42 AM | Last Updated : 19th May 2019 03:42 AM | அ+அ அ- |

தேஜஸ் அதிவிரைவு ரயிலுக்கு கொடைக்கானல் ரோடு நிலையத்திற்கு மாற்றாக, திண்டுக்கல்லில் நிறுத்தம் வழங்க வேண்டும் என வர்த்தகர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திண்டுக்கல் வர்த்தகர் சங்க பொதுச் செயலர் ஏ.பாலன் தெரிவித்துள்ளது: மதுரை-சென்னை இடையே இயக்கப்படும் தேஜஸ் அதிவிரைவு ரயில், மதுரைக்கு அடுத்தப்படியாக கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்தில் மட்டுமே நிறுத்தப்படுகிறது. இதனால், திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பயணிகள், 30 கி.மீ. தொலைவிலுள்ள கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்தைப் பொருத்தவரை தேஜஸ் ரயிலை 2 சதவீதம் பயணிகள் கூட பயன்படுத்துவதில்லை. மேலும் இங்கிருந்து கொடைக்கானல் மற்றும் பழனி போன்ற நகரங்களுக்கு இயக்கப்படும் வாடகை கார்களின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளன. இதுபோன்று பல்வேறு பிரச்னைகளால் பயணிகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தேஜஸ் அதிவிரைவு ரயிலுக்கு திண்டுக்கல்லில் நிறுத்தம் வழங்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.