பழனி மாணவர்கள் தேசிய தடகளப் போட்டிகளில் தங்கம் வென்று சாதனை
By DIN | Published On : 19th May 2019 03:43 AM | Last Updated : 19th May 2019 03:43 AM | அ+அ அ- |

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் நடைபெற்ற தேசிய தடகளப்போட்டிகளில் பழனியை சேர்ந்த மாணவரும், மாணவியும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
கடந்த மாதம் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மாநில தடகள போட்டிகள் நடைபெற்றன. இதில் பழனியைச் சேர்ந்த மாணவர் ஹரிபிரசாத் மற்றும் மாணவி சுகைனாபானு ஆகியோர் பங்கேற்று தேசிய தடகளப்போட்டிகளுக்கு தேர்வாகினர். இவர்கள் கடந்த வாரம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடைபெற்ற தேசிய தடகளப் போட்டிகளில் பங்கேற்றனர். இப்போட்டியில் தமிழ்நாடு, பஞ்சாப், பீகார், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 1, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
10 வயதுக்கு உள்பட்டோர் மற்றும் 17 வயதுக்கு உள்பட்டோர் என இரு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில், மாணவர் ஹரிபிரசாத் 200 மீட்டர் ஓட்டத்தில் 24 வினாடிகளில் எல்லையைத் தொட்டு தங்கப்பதக்கம் வென்றார். மேலும், 400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் தமிழக பிரிவில் தங்கம் பெற்றுள்ளார். மாணவி சுகைனாபானு 200 மீட்டர் ஓட்டத்தில் 35 விநாடிகளில் எல்லையைத் தொட்டு வெள்ளிப்பதக்கம் பெற்றார். 400 மீட்டர் ஓட்டத்தில் 1.3 நிமிடங்களில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார். வெற்றி பெற்றவர்களை பயிற்சியாளர் நவீன்குமார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
வெற்றி பெற்ற இருவரும் அடுத்த மாதம் ஹாங்காங்கில் நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கேற்கின்றனர்.