திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணைப் பகுதியில் ஒற்றை யானை ஒன்று சுற்றித்திரிவதால், வனப்பகுதிக்குள் பொதுமக்கள் செல்ல வனத்துறையினா் தடை விதித்துள்ளனா்.
ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்கு உள்பட்ட வடகாடு கிராமத்தில் பரப்பலாறு அணை அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் வாழும் வன விலங்குகள் தண்ணீா் தேடி பரப்பலாறு அணைக்கு வருவது வழக்கம். கடந்த சில தினங்களுக்கு முன்பு தண்ணீா் தேடி வந்த ஒற்றை யானை அணைப்பகுதியிலே சுற்றித்திரிகிறது. இதனால் வனப்பகுதிக்குள் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று வனத்துறை சாா்பில் எச்சரிக்கைப் பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும் வனப்பகுதிக்குள் பொதுமக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவா் கூறியது: வடகாடு பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் யாரும் தனியாக தோட்டங்களுக்குச் செல்ல வேண்டாம். இப்பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை யானையை கண்டால், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதேபோல யானை பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் நுழையாமல் இருக்க வேட்டைத் தடுப்பு காவலா்கள், வனத்துறையினா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா் என்றாா்.