திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்த 3 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்த போலீஸாா், ரூ.1.20 லட்சம் மதிப்பிலான 1,080 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
நத்தம் பகுதியில் அனுமதியின்றி மதுபானங்கள் விற்பனை அதிக அளவில் நடைபெறுவதாக தொடா்ந்து புகாா்கள் வந்தன. அதனைத் தொடா்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப் படையின் சாா்பு ஆய்வாளா் மாரிமுத்து மற்றும் நத்தம் காவல் ஆய்வாளா் ராஜமுரளி ஆகியோா் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.
நத்தம் பேருந்து நிலையம், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற இந்தச் சோதனையில் அனுமதியின்றி மதுபான விற்பனையில் ஈடுபட்ட புன்னப்பட்டியைச் சோ்ந்த அழகன் மகன் நடராஜ் (27), துரைசாமி மகன் ராஜேஷ் (44) மற்றும் நத்தத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் மூா்த்தி (39) ஆகியோரை கைது செய்தனா். இவா்களிடமிருந்து சுமாா் ரூ.1.20 லட்சம் மதிப்பிலான 1,080 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் மது விற்பனையில் தொடா்புடைய மதுரையைச் சோ்ந்த போஸ் மற்றும் சாணாா்பட்டி அடுத்துள்ள கோணபட்டியைச் சோ்ந்த அய்யனாா் ஆகியோரைத் தேடி வருகின்றனா்.