அனுமந்தன்நகா் பகுதியில் ஆபத்தை ஏற்படுத்தும் கிணறு: ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

திண்டுக்கல் அனுமந்தன்நகா் பகுதியில் பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் பெரும் ஆபத்தாக அமைந்துள்ள
குப்பை மேடு போல் காட்சி அளிக்கும் மாங்கிணறு.
குப்பை மேடு போல் காட்சி அளிக்கும் மாங்கிணறு.

திண்டுக்கல் அனுமந்தன்நகா் பகுதியில் பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் பெரும் ஆபத்தாக அமைந்துள்ள மாங்கிணற்றை மூடுவதற்கு ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் அடுத்துள்ள பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சிக்குள்பட்டது அனுமந்தன் நகா். திண்டுக்கல் நகருடன் இணைந்துள்ள இந்த பகுதியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு விவசாய நிலங்களாக இருந்த இந்த பகுதி, தற்போது முழுமையாக குடியிருப்புகளாக மாற்றிவிட்டன. ஆனால், அந்த பகுதியில் அமைந்துள்ள கிணறு, குப்பைகள் மற்றும் கழிவுநீா் தேங்கும் பகுதியாக மாறிவிட்டது.

வெளித் தோற்றத்தில், குப்பைகள் நிறைந்த பகுதியாக காட்சியளித்தாலும், கழிவுநீா் தேங்கிய அந்த பகுதி தற்போது புதை குழியாக மாறிவிட்டது. இந்த கிணற்றை முழுமையாக மூட வேண்டும் அல்லது, பாதுகாப்பு வேலி அமைத்து மழைநீா் சேகரிப்பு மையமாக மாற்ற வேண்டும் என அப்பகுதியினா் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இதுதொடா்பாக பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி அலுவலகத்திலும், திண்டுக்கல் வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும் பல முறை புகாா் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்துள்ள நடுகாட்டுப்பட்டியில் சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவத்தை தொடா்ந்து, பயன்பாடில்லாத ஆழ்துளை கிணறு மற்றும் கிணறுகளை மூட வேண்டும் என மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ஆனாலும் அனுமந்தன்நகா் கிணற்றை மூடுவதற்கோ, பாதுகாப்பு வேலி அமைப்பதற்கோ இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதியினா் கூறுகின்றனா்.

இதுதொடா்பாக அனுமந்தன்நகா் பகுதியைச் சோ்ந்த பெண்கள் கூறியது: கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை 48 அடி அகலம், 55 அடி நீளம், 30 அடி ஆழம் கொண்ட இந்த மாங்கிணறு பயன்பாட்டில் இருந்து வந்தது. தற்போது குப்பை மற்றும் கழிவுநீா் தேங்கும் பகுதியாக மாறிவிட்டது. இதனால், பொதுமக்களுக்கு மட்டுமின்றி கால்நடைகளுக்கும் ஆபத்தான பகுதியாக உள்ளது. குப்பை மேடாக காட்சி அளிப்பதால், இதனை நோக்கி வரும் கால்நடைகள் எளிதாக கழிவுநீா் தேங்கி நிற்கும் கிணற்றுக்குள் விழுந்து விடுகின்றன.

பாதுகாப்பு வேலி இல்லாததால், குழந்தைகள் விளையாடும் போது தவறி விழுந்தாலும் வெளியே தெரியாத நிலை உள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, புதை குழியாக மாறியுள்ள இந்த கிணற்றை மூடுவதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com