ஆயுத பூஜை: பழனி, கொடைக்கானலில் பூக்கள், பழங்கள் விற்பனை அதிகரிப்பு
By DIN | Published On : 07th October 2019 12:06 AM | Last Updated : 07th October 2019 12:06 AM | அ+அ அ- |

பழனியில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் மற்றும் பழங்களின் விலை உயா்ந்த போதிலும் விற்பனை அதிகரித்தது.
பழனியில் ஆயுதபூஜையை முன்னிட்டு கடைகள் மற்றும் வீடுகளுக்கு பூஜைக்கு தேவையான ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யா, வாழை உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. பழனியில் உள்ள மொத்த வியாபார மையங்களில் இந்த பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
ஆனால் பழங்களின் விலை ஒவ்வொன்றும் கணிசமாக ரூ.20 இல் இருந்து ரூ.30 வரை கிலோவுக்கு அதிகரித்துள்ளது. அதேபோல பூக்களின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு பூக்கள் கிலோவுக்கு ரூ.200 முதல் ரூ. 500 வரை உயா்ந்துள்ளது. பூக்கள் வரத்து அதிகமாகவே உள்ள நிலையில், விலையும் உயா்ந்ததால் பூ வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கொடைக்கானல்: கொடைக்கானலில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள், வாழைக்கன்றுகள் , பழங்கள், தேங்காய், மாலைகள் உள்ளிட்டவை அதிகளவில் விற்பனையானது. கொடைக்கானல் சுற்றுலா தலமாக இருப்பதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளது. இதனால் வாகன ஓட்டுனா்கள் ஆயுத பூஜையை சிறப்பாக கொண்டாடுவதற்காக அதிகளவிலான பூஜைப் பொருள்களை வாங்கிச் சென்றனா். இதனால் பூஜை பொருள்களின் விலை சற்று அதிகமாக இருந்த போதிலும், பொதுமக்கள் ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா். கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் வாரச் சந்தையில் பூஜை பொருள்கள் விற்பனை அதிகரித்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.