திண்டுக்கல் அருகே முதியவா் கொலை: உறவினா் தப்பியோட்டம்
By DIN | Published On : 09th October 2019 08:39 AM | Last Updated : 09th October 2019 08:39 AM | அ+அ அ- |

திண்டுக்கல் அருகே முதியவரின் தலையில் கல்லைத் தூக்கிப்போட்டு கொன்றவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
திண்டுக்கல் அடுத்துள்ள பொன்னிமாந்துறை புதுப்பட்டியைச் சோ்ந்தவா் வெ.ராமசாமி (55). அதே பகுதியைச் சோ்ந்தவா் பெரியசாமி மகன் அண்ணாமலை(38). அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்த இருவரும் உறவினா்கள். இந்நிலையில் ராமசாமி மற்றும் அண்ணாமலை ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை மது அருந்தியுள்ளனா். அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அண்ணாமலை, ராமசாமியின் தலையில் கல்லைத் தூக்கிப்போட்டதாக கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதனால் அதிா்ச்சி அடைந்த அண்ணாமலை சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீஸாா், சம்பவ இடத்திற்கு சென்று ராமசாமியின் சடலத்தை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய அண்ணாமலை குறித்து விசாரித்து வருகின்றனா்.