பழனி கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை செயலர் ஆய்வு
By DIN | Published On : 01st September 2019 12:49 AM | Last Updated : 01st September 2019 12:49 AM | அ+அ அ- |

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை செயலர் அபூர்வவர்மா சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து 2 ஆவது கம்பிவட ஊர்தி (ரோப்கார்) பணிகள் மற்றும் பஞ்சாமிர்த தயாரிப்பு நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் முதல் கம்பிவட ஊர்தி வருடாந்திர பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்பட்டு பணிகள் நிறைவுபெற்றுள்ளன. விரைவில் இதை இயக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
அதே போல சுமார் ரூ.70 கோடியில் 2 ஆவது கம்பிவட ஊர்தி அமைப்பதற்கான பணிகளும், பூமிபூஜை நடத்தப்பட்டு, தற்போது தரைத்தளத்தை சமப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழக இந்து சமய அறநிலையத்துறை செயலர் அபூர்வவர்மா சனிக்கிழமை மலைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் மலைக்கோயிலில் கும்பாபிஷேகத்துக்கான பாலாலயம் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து மலைக்கோயிலில் நடைபெற்று வரும் முதல் கம்பிவட ஊர்தி பராமரிப்புப் பணிகள், அடிவாரத்தில் நடைபெறும் 2 ஆவது கம்பிவட ஊர்தி ஆயத்தப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், பஞ்சாமிர்த நிலையத்தை ஆய்வு செய்த செயலர் பஞ்சாமிர்தம் தயாரிப்பது குறித்தும், தயாரிப்புக்கான செலவு குறித்தும் கேட்டார்.
இதைத் தொடர்ந்து பஞ்சாமிர்தம் தயாரிக்கும் நிலையத்தை தூய்மையாகவும், சுகாதாரமாகவும், அனைத்து எச்சரிக்கை உபகரணங்களையும் தயார்நிலையிலும் வைக்க அறிவுறுத்தினார்.
பின்னர் கோயில் சார்பில் செயல்படும் கல்லூரிகள், பள்ளிகள் குறித்தும், உபகோயில்கள் குறித்தும், மேம்பாட்டுப் பணிகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் தண்டபாணி நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் பொறியாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.