திண்டுக்கல், கொடைக்கானலில் பலத்த மழை
By DIN | Published On : 11th September 2019 07:53 AM | Last Updated : 11th September 2019 07:53 AM | அ+அ அ- |

திண்டுக்கல், கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை இடியுடன் கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் குறைந்து மேகமூட்டமும், காற்றும் நிலவி வந்தது. அவ்வப்போது சாரலும், சிறிது நேரம் மிதமான மழையும் பெய்து வந்தது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதலே மேகமூட்டமும், விட்டுவிட்டும் மழை பெய்து வந்தது. அதன் பின் இடியுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கொடைக்கானலில் பருவ மழை பொய்த்த காரணத்தால் குடிநீர்த் தேக்கங்களில் வெகுவாக தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் 10 முதல் 15 நாள்களுக்கு ஒரு முறை நகராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது அவ்வப்போது மழை பெய்து வருவதால் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.