பழனியில் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகைகள் திருட்டு
By DIN | Published On : 11th September 2019 07:55 AM | Last Updated : 11th September 2019 07:55 AM | அ+அ அ- |

பழனியில் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகைகள் மற்றும் ரூ. 3 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
பழனி புதுநகரைச் சேர்ந்தவர் முருகானந்தம் (62). ஓய்வு பெற்ற நில அளவையர். இவர் ஞாயிற்றுக்கிழமை வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் மதுரையில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்றுள்ளார். செவ்வாய்க்கிழமை முருகானந்தம் வீட்டு வழியாக அவரது சகோதரி கோமதி சென்றுள்ளார்.
அப்போது வீட்டின் கதவு திறந்திருந்தது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு துணிகள் சிதறியிருப்பதை பார்த்து முருகானந்தத்துக்கும், போலீஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்தும் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் ஆய்வு மேற்கொண்டனர்.
முருகானந்தம் வந்து பார்த்த போது வீட்டில் இருந்த 5 பவுன் நகைகள், மூன்றாயிரம் ரொக்கம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து பழனி டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.