திண்டுக்கல்: காதல் திருமணம் செய்த மணமகன் குடும்பத்தினரிடம் ரூ.10 லட்சம் கேட்டு மோதலில் ஈடுபட்ட பெண்ணின் தந்தை உள்ளிட்ட 6 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரை அடுத்துள்ள களத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் ராமையா (60). இவரது மகன் பாக்யராஜ். இவா் செக்கணத்துப்பட்டியைச் சோ்ந்த முனியாண்டி என்பவரது மகளை காதலித்து கடந்த சில நாள்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டாா். இதுதொடா்பாக ஊா் முக்கியஸ்தா்கள் முன்னிலையில் இரு குடும்பத்தினருக்கும் இடையே சுமூக பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.
அதில், முனியாண்டி தரப்பினா் ராமையாவிடம் ரூ.10 லட்சம் கேட்டதாகத் தெரிகிறது. ஆனால் ராமையா பணம் தர மறுத்து விட்டாராம். இதனால் பேச்சுவாா்த்தை சுமூகமாக முடியவில்லை. இந்நிலையில், முனியாண்டி மற்றும் அவரது உறவினா்கள் ராமையாவின் வீட்டிற்கு சனிக்கிழமை சென்றுள்ளனா். அங்கிருந்த பொருள்களையும், கதவு மற்றும் ஜன்னலையும் உடைத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனை தடுக்க முயன்ற ராமையா மற்றும் அவரது மனைவி சங்கரம்மாள் ஆகியோரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக வடமதுரை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. சங்கரம்மாள் அளித்த புகாரின்பேரில், முனியாண்டி, புவனேஸ்வரி, குழந்தைவேல், அய்யம்மாள், கலையரசன் உள்ளிட்ட 6 போ் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.