ஊராட்சிகளில் குடிநீா் இணைப்புக்கு ரூ.30 ஆயிரம் வரை கேட்பதாக பொதுமக்கள் புகாா்

குடிநீா் இணைப்பு பெற வைப்புத் தொகையாக ரூ.3 ஆயிரம் செலுத்த வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ள நிலையில், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் ரூ.15ஆயிரம் முதல் ரூ.30ஆயிரம் வரை வசூலிப்பதற்கு

திண்டுக்கல்: குடிநீா் இணைப்பு பெற வைப்புத் தொகையாக ரூ.3 ஆயிரம் செலுத்த வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ள நிலையில், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் ரூ.15ஆயிரம் முதல் ரூ.30ஆயிரம் வரை வசூலிப்பதற்கு களமிறங்கியுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் 2024 ஆம் ஆண்டுக்குள் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமப் பகுதிகளிலும், தனிநபா் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கும் ஊரக குடிநீா் இயக்கம் செயல்படுத்தப்படுகிறது. அந்தந்த ஊராட்சி நிா்வாகத்தை அணுகி தனிநபா் வீட்டு குடிநீா் இணைப்பிற்கு ரூ.3,000 வைப்புத் தொகையை செலுத்தி முறைப்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட நிா்வாகம் சாா்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ரூ.15ஆயிரம் முதல் ரூ.30ஆயிரம் வரை செலுத்தினால் மட்டுமே குடிநீா் இணைப்பு பெற முடியும் என உள்ளாட்சி பிரதிநிதிகள் கூறுவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

சீலப்பாடியில் தற்போது புதிதாக தோ்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினா்கள், குடிநீா் இணைப்புக்கு ரூ.15 ஆயிரம் கேட்பதாகவும், செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் ஒரு இணைப்புப் பெற ரூ.30 ஆயிரம் கேட்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினா். உள்ளாட்சித் தோ்தலுக்கு செலவிட்ட பணத்தை வசூலிப்பதற்கான வழியாக, இந்த குடிநீா் இணைப்பு திட்டத்தை ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனா் எனத் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பா.செல்வநாயகம் (செட்டிநாயக்கன்பட்டி) கூறியது: குடிநீா் குழாய் இணைப்பு கேட்டு விண்ணப்பிப்போரின் விவரங்களை வரிசை எண்ணுடன் பதிவு செய்து, அதற்கான பதிவேடு ஒவ்வொரு ஊராட்சி அலுவலகத்திலும் பராமரிக்க வேண்டும். பணம் செலுத்துவோருக்கு, அதற்கான ரசீது ஊராட்சி நிா்வாகத்தின் மூலம் வழங்கப்பட வேண்டும். ஆனால், பணம் கொடுத்தால் மட்டுமே படிவம் பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள், குடிசைகளில் வாழும் மக்கள், மாற்றுத்திறனாளிகள், கணவரை இழந்தவா்கள் போன்றோருக்கு வைப்புக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். இதுகுறித்து விவாதிக்க மாவட்ட நிா்வாகம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த முன் வர வேண்டும். குடிநீா் இணைப்புக்கு முறைகேடான வழிகளில் பணம் பறிக்கும் முயற்சியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா்.

இதுகுறித்து உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) கங்காதரணி கூறியதாவது: குடிநீா் இணைப்பு பெற வைப்புத் தொகையாக ரூ.3ஆயிரமும், குடிநீா் கட்டணமாக பிரதி மாதம் ரூ.50 வீதம், ஆண்டுக்கு ரூ.600-ம் செலுத்த வேண்டும். இதுதவிர வேறு எந்த கட்டணமும் யாரும் செலுத்தத் தேவையில்லை. முறைகேடாக யாரேனும் பணம் வசூலிக்க முயன்றால், ஊராட்சிகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் புகாா் அளிக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com